தியாகதுருகம்: தியாகதுருகம் சூரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. தியாகதுருகம் அரசு மருத்துவமனை அருகில் உள்ள சூரியம்மன் கோவில் பக்தர்கள் முயற்சியால் புதுப்பிக்கப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 25ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. ரக்ஷாபந்தனம், அங்குரார்பணம், பூர்ணாஹூதி, கும்ப அலங்காரம் செய்து யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை நாடிசந்தானம், கோபூஜை செய்து யாக சாலையில் இருந்து கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்தது. காலை 7.15 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. தீயணைப்பு துறை வாகனம் மூலம் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு அபிஷேகமும், மலர் அலங்காரமும் செய்து மகாதீபாராதனை நடந்தது. சுற்றுவட்டார கிராம பக்தர்கள் திரளாக விழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.