பதிவு செய்த நாள்
28
அக்
2015 
11:10
 
 சேலம்: சேலம், சிவன் கோவிலில்களில், ஐப்பசி மாத பவுர்ணமியை ஒட்டி நேற்று நடந்த அன்னாபிஷேகத்தில், திரளாக பக்தர்கள், ஸ்வாமி தரிசனம் செய்தனர். சேலம், இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள, காசி விஸ்வநாதர் கோவிலில், நிறைமணி விழாவாக கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாத பவுர்ணமியில் நேற்று காலை, மூலவருக்கு மகா ருத்ர கலசாபிஷேகம் நடந்தது. மாலையில் அன்னாபிஷேகம் நடந்தது. இரவு, 11 மணிக்கு பால், இளநீர் அபிஷேகம் நடந்தது. இன்று காலை, மூலவருக்கு பஞ்சமுக ருத்ராட்ச கவசம் சாத்தி, மகா தீபாராதனையை தொடர்ந்து மாலையில், ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. இதே போல், சேலம் சுகவனேஸ்வரர் கோவில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், மூலவருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. சேலம், செவ்வாய்ப்பேட்டை அம்பலவாணஸ்வாமி கோவில், செவ்வாய்ப்பேட்டை சொக்கநாதர் கோவில், அன்னதானப்பட்டி மீனாட்சி உடனுறை காமதீஸ்வரர் கோவில், சீரகாபாடி, 1,008 சிவாலயம் ஆகிய கோவில்களில் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. இதே போல், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், பூலாம்பட்டி கைலாசநாதர் கோவில் உட்பட சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும், நேற்று அன்னாபிஷேகம் நடந்தது.