பதிவு செய்த நாள்
27
ஜூலை
2011
11:07
ஆரல்வாய்மெழி : முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோயில் பூக்குழி கொடை விழாவில் 11 யானைகள் பவனி வர பக்தர்கள் வேல் குத்தியும் முளைப்பாரி, பால்குடம் ஏந்தியும் ஊர்வலமாக வந்தனர்.ஆரல்வாய்மொழி அருகே பிரசித்தி பெற்ற முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மட்டுமல்லாமல் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக வந்து செல்கின்றனர்.இந்த கோயிலில் நடைபெறும் பூக்குழி கொடை விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு பூக்குழி இறங்குவர். வெகு விமரிசையாக நடக்கும் இந்த விழாவில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த கோயில் பூக்குழி கொடை விழா நேற்று முன்தினம் (25ம் தேதி) துவங்கியது. இதையொட்டி காலை கணபதி ஹோமம், தொடர்ந்து தீபாராதனை, கஜ பூஜை, திருவிளக்கு பூஜை நடந்தது. மேலும் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் 108 வேல் குத்தி யாத்திரையாக அம்மன் கோவிலுக்கு வந்தனர்.நேற்று நடந்த விழாவில் ஆரல்வாய்மொழி அகலிகை ஊற்று பிள்ளையார் கோயிலில் அபிஷேக குடங்கள் நிறைக்கப்பட்டன. பின்னர் அங்கிருந்து 10 யானைகள் பவனி வர தொடர்ந்து பக்தர்கள் அபிஷேக குடங்கள், முளை பாத்தி ஏந்தி, பஜனை மற்றும் மேள தாளங்களுடன் பாத யாத்திரையாக வந்தனர்.
ஏராளமான பக்தர்கள் முளைபாத்தி, பால்குடங்களை ஏந்தி வந்தனர்.ஊர்வலத்திற்கு முன்னால் இரண்டு குதிரைகளில் சிவன் வேடம் அணிந்தவர்கள் சென்றனர். மேலும் விநாயகர், காளி போன்ற வேடங்களை அணிந்த பக்தர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.இதுபோல் தோவாளை முருகன் கோயிலில் இருந்து யானை பவனியுடன் வேல்குத்து, பறவை காவடி, சூரிய காவடி, தொட்டில் காவடி, அலகு குத்தி தேர் இழுத்தவாறு பக்தர்கள் வந்தனர். இந்த ஊர்வலம் ஆரல்வாய்மொழி ஜங்ஷனை வந்தடைந்தது. தொடர்ந்து 11 யானைகள் முன் செல்ல பின்னால் அனைவரும் யாத்திரையாக சென்றனர்.முன்னதாக சிறுவர் சிறுமியரின் சிலம்பாட்டம் நிகழ்ச்சி நடந்தது. இந்த ஊர்வலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோயிலை அடைந்தது.முன்னதாக கோயிலில் 108 கலச பூஜையும் வில்லிசையும் நடந்தது. பின்னர் சுவாமிகளின் பாயாச குளியல் அபிஷேகம், உச்சிகால தீபாராதனை, அன்னதானம், மாலை அக்னி கலசம் எடுத்தல், அம்மன் தேர்பவனி ஆகியன நடந்தது.மாலை தீப ஆராதனை, இரவு பூக்குழி பூஜை, அக்னி வளர்த்தல் நடந்தது. கோயிலில் வீரமணிதாசன் குழுவினரின் இறை அருளிசை, அலங்கார தீபாராதனை, பூ படப்பு நடந்தது. இதன் பின் நள்ளிரவில் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்வேறு பக்தர்கள் பூக்குழி இறங்கினர். நிகழ்ச்சியில் பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் இன்று (27ம் தேதி) காலை 9 மணிக்கு நையாண்டி மேளம், தப்பட்டை, 10 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு பொங்கல் வழிபாடு, மதியம் ஒரு மணிக்கு மஞ்சள் நீராடுதல், 2 மணிக்கு பிரசாதம் வழங்குதல், மாலை 5 மணிக்கு திருஷ்டி பூஜை ஆகியன நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி அருணாசலம் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.இந்த விழாவை ஒட்டி நாகர்கோயிலில் இருந்து முப்பந்தல் பகுதிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.