திருவிடைமருதூர் கோவிலில் ஆடிப்பூர விழா: 63 ஆண்டுக்குப்பின் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2011 11:07
கும்பகோணம்: திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலில் 63 ஆண்டுகளுக்கு பின் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான பெருநலமாமுலையம்மை உடனாய மகாலிங்கப்பெருமான் கோவில் உள்ளது. புராணச்சிறப்பும் வரலாற்றுச்சிறப்பும் கொண்ட இத்தலம் வணங்கி வழிபடுவோர்க்கு தோஷ நிவர்த்தியாகி நலமுடன் வாழ வழிநல்கும் சிறப்புபெற்றது. சிறப்புகள் பெற்ற இத்தலத்தில் 63 ஆண்டுகளுக்கு பிறகு ஆடிப்பூர அம்மனுக்கு ஆடிப்பூர விழா கொண்டாடப்படுகிறது. இன்று சிம்மவாகனத்திலும், 28ம் தேதி சகோபுரம் இடப வாகன காட்சியும், 29ம் தேதி காமதேனு வாகனத்திலும், 30ம் தேதி அன்னபட்சி வாகனத்திலும், 31ம் தேதி கிளி வாகனத்திலும் வீதியுலா நடக்கிறது. ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளி தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இரண்டாம் தேதி காலை 7 மணிக்கு மேல் ஆடிப்பூர தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு 10 மணிக்கு வெள்ளிரதம் மற்றும் கிளிவாகனத்தில் வீதியுலா காட்சி நடக்கிறது. மூன்றாம் தேதி காலை 9 மணிக்கு சர்வ ப்ராயச்சித்த அபிஷேகமும், இரவு 7 மணிக்கு அம்பாள் யதாஸ்தனம் எழுந்தருளலும் நடக்கிறது. ஆடிப்பூர விழா ஏற்பாடுகளை கட்டளை ஸ்தானீகம் மீனாட்சி சுந்தரத்தம்பிரான் சுவாமிகள், கண்காணிப்பாளர் சுவாமிநாதன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.