சபரிமலை: சபரிமலை வரும் பக்தர்கள் விபத்தில் இறந்தால் இழப்பீடு வழங்கும் இன்சூரன்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தேவசம்போர்டு ஊழியர்களுக்கும் இது விரிவு படுத்தப்ட்டுள்ளது. சபரிமலை வரும் பக்தர்களுக்காக திருவிதாங்கூர் தேவசம்போர்டு, நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனியுடன் இணைந்து, இன்சூரன்ஸ் திட்டத்தை கடந்த சில ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.இதன்படி விபத்து மரணம் ஏற்பட்டால் அவர்கள் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறப்பவர்களுக்கு இந்த திட்டத்தில் இழப்பீடு வழங்க முடியாது என்றாலும் இறுதி சடங்கு செலவு வழங்கப்படும். இதன் படி கேரளாவிற்கு உட்பட்ட பகுதியில் 30 ஆயிரம் ரூபாயும், வெளிமாநிலத்துக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். இந்த ஆண்டு சபரிமலையில் பணிபுரியும் தேவசம்போர்டு ஊழியர்கள் மற்றும் பல்வேறு துறை ஊழியர்களும் இன்சூரன்ஸ் திட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர். விபத்தில் காயம் ஏற்பட்டால் சிகிச்சை செலவாக அதிக பட்சமாக பத்தாயிரம் ரூபாய் இவர்களுக்கு வழங்கப்படும். சபரிமலையை சுற்றி 25 கிலோ மீட்டர் சுற்றளவுிற்கு இந்த திட்டத்திற்கு பொருந்தும். செங்கன்னுார், திருவல்லா, கோட்டயம் ரயில் நிலையங்களும் இந்த திட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது.