சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக கேரளாவில் புதிய பாதை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2015 11:12
தேனி: கேரளாவில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக வண்டிப்பெரியாரில் இருந்து சத்திரம் வழியாக புதிய பாதை திறக்கப்பட்டுள்ளது. டைமுக்கு 19 ம் ஏரியா வழியாக எஸ்டேட் பாதை திறந்தால் பக்தர்கள் 50 கி.மீ., துாரம் சுற்றுவது குறையும் என சபரிமலை நடவடிக்கை குழு முதல்வருக்கு பரிந்துரைத்துள்ளது.வட மாவட்டங்களில் இருந்து ஆண்டுதோறும் சபரிமலை வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 4 ஆண்டிற்கு முன்பு புல்மேட்டில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 102 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர், ஆண்டுதோறும் கேரள போலீஸ் உயர் அதிகாரிகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.சபரிமலைக்கு செல்வதற்கு வண்டிப்பெரியாரில் இருந்து அரணைக்கல், மவுண்ட் எஸ்டேட், சத்திரம் வழியாக புல்மேடு செல்லும் பாதை பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்தது. கேரள வனத்துறை கொடுத்த நெருக்கடி காரணமாக சில ஆண்டுகளாக இந்த பாதை மூடப்பட்டது. புல்மேடு நெரிசலுக்கு பிறகு மீண்டும் இந்த பாதை திறக்கப்பட்டது. குமுளி வழியாக செல்லும் பக்தர்கள் அனைவரும் தற்போது இந்த பாதை வழியாக எளிதில் சபரிமலைக்கு சென்று விடுகின்றனர். ஆனால் கம்பம்மெட்டு, கட்டப்பனை, குட்டிக்கானம் வழியாக செல்பவர்கள் கூடுதலாக 50 கி.மீ., துாரம் பயணம் செய்து சபரிமலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க, கட்டப்பனை ஆனை விலாசத்தில் இருந்து டைமுக்கு 19ம் ஏரியா வழியாக 3 கி.மீ., தேயிலை எஸ்டேட்டிற்குள் செல்லும் இந்த பாதையை திறந்து விட்டால், கட்டப்பனையில் இருந்து வண்டிப்பெரியார் வந்து சத்திரம் வழியாக சபரிமலை சென்று விட முடியும். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபரிமலை நடவடிக்கை குழு கேரள அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.