ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்திலிருந்து 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டாள் அபிஷேகத்திற்கு புனிதநீர் எடுத்து வரப்பட்டு காலசாந்தி பூஜை நடந்தது. நகரின் மேற்கே ஆண்டாள் நீராடும் திருமுக்குளம், கடந்த பல ஆண்டுகளாக வறண்டிருந்தது. தற்போது பெய்துவரும் மழையால் 16 ஆண்டுக்கு பிறகு முழு அளவில் நிரம்பியது. இதனையடுத்து நேற்று திருமுக்குளத்தில் புடவை, மஞ்சள், வளையல், பூ, கண்ணாடி போன்றவைகளை விட்டு, சிறப்பு பூஜைகளை பத்ரிநாராயண பட்டர் தலைமையில் பட்டர்கள் செய்தனர். பின்னர் மரியாதை செய்து புனித நீர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு, ஆண்டாளுக்கு அபிஷேகம், காலசாந்தி பூஜைகள் நடந்தன. பக்தர்கள், கோயில் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.