அழகர்கோவில்: அழகர்கோவில் மலை மீது உள்ள சோலைமலை முருகன் கோயிலில் கார்த்திகை சோம வார விழா திங்கட் கிழமை தோறும் நடந்தது. கடைசி சோம வாரத்தை முன்னிட்டு நேற்று 1008 சங்காபிஷேகம் நடந்தது. காலையில் மூலவர் முருகன், வள்ளி, தெய்வானைக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலையில் 1008 சங்குகள் ஓம் வடிவில் அமைக்கப்பட்டு, நூபுரகங்கை தீர்த்தம் நிரப் பட்டன. யாகசாலை பூஜை நடந்தது. பூஜை முடிந்த பின் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த தங்கக் குடம் மற்றும் சங்குகளில் வைத்திருந்த தீர்த்தம் மூலம் உற்சவர் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.