பதிவு செய்த நாள்
04
ஆக
2011
11:08
திருத்தணி : திருத்தணியில், அம்மன் கோவில்களில் நடந்த ஜாத்திரை திருவிழாவில் நூற்றுக்கணக்கான, பெண் பக்தர்கள் உடல் முழுவதும், வேப்பிலை அணிந்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்று, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். திருத்தணி ஆறுமுக சுவாமி கோவில் தெருவில் உள்ள தணிகை மீனாட்சி அம்மன் கோவில் (புறா கோவில்), மேட்டுத் தெரு படவேட்டம்மன் கோவில், அக்கைய்யாநாயுடு சாலையில் உள்ள ஸ்ரீ தணிகாசலம்மன் கோவில், சித்தூர் சாலையில் உள்ள பொன்னியம்மன் கோவில் உட்பட, 10க்கும் மேற்பட்ட கோவில்களில், நேற்று ஜாத்திரை திருவிழா நடந்தது.
விழாவை முன்னிட்டு காலை அம்மன் கோவில் வளாகத்தில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. காலை 10 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மனுக்கு, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன், திருத்தணி நகரம் முழுவதும் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நூற்றுக்கணக்கான பெண்கள் உடல் முழுவதும் வேப்பிலை அணிந்து, வீதியில் ஊர்வலமாக அம்மன் கோவிலை மூன்று முறை வலம் வந்து, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இரவு 10 மணிக்கு வீதி நாடகம் மற்றும் இன்னிசை கச்சேரிகள் நடந்தன. விழாவில் திருத்தணி எம்.எல்.ஏ., அருண்சுப்பிரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ., அரி, நகராட்சி தலைவர் பாமாசந்திரன், ஒன்றியச் சேர்மன் ஜோதிநாயுடு, நகரச் செயலர் சவுந்தராஜன் உட்பட, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.