பதிவு செய்த நாள்
04
ஆக
2011
11:08
மேட்டூர்:ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று லட்சக்கணக்கானோர், மேட்டூர் காவிரியில் நீராடினர். கரையோர கிராம மக்கள் காவல்தெய்வங்களுக்கு பக்தர்கள் சிறப்பு பூஜை நடத்தியதால் நேற்று காவிரி கரையோர கிராமங்கள் விழாகோலம் பூண்டது.கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும், 18 நாள் நடந்த பாரதபோர், ஆடி18ம் தேதி நிறைவு பெற்றது. போரில் வென்ற பாண்டவர்கள் ஆடி18ம் நாளில் காவிரியில் தங்கள் போர் கருவிகளை சுத்தம் செய்து, புனித நீராடினர்.அதர்மம் அழிந்து, தர்மம் வென்ற, ஆடி 18ம் நாளையே காவிரி கரையோர பக்தர்கள் ஆடிப்பெருக்கு பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர். ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், காவிரி கரையோர மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.ஈரோடு, சேலம், தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று மேட்டூர் காவிரியில் குவிந்தனர். மேட்டூர் முனியப்பன் கோவில், காவிரிபாலம், எம்.ஜி.ஆர்., பாலம் பகுதியில் காவிரியில் நீராடினார். பின்பு அணை முனியப்பனை வணங்கி, பூங்காவை சுற்றி பார்த்து ஊர் திரும்பினர்.
காவிரி கரையோர கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் காவல் தெய்வங்களின் வேல், சூலாயுதம், கத்தி போன்ற ஆயுதங்களை மேட்டூர் காவிரியில் சுத்தம் செய்து, நீராடி, புனித நீரை கிராம கோயில்களுக்கு எடுத்து சென்று காவல்தெய்வங்களுக்கும், குலதெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை நடத்தினர். அதனால், நேற்று காவிரி கரையோர பகுதிகள் அனைத்தும் விழாக்கோலம் பூண்டது.ஆடிப்பெருக்கை முன்னிட்டு சேலம், தர்மபுரி, ஈரோடு, தாரமங்கலம், ஜலகண்டபுரம் பகுதியில் இருந்து மேட்டூருக்கு 100 சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. சேலம் எஸ்.பி., மயில்வாகனன் உத்தரவுபடி, மேட்டூர் டி.எஸ்.பி., கோபால், டி.எஸ்.பி., (கலால்) சந்திரசேகரன் தலைமையில், 4 இன்ஸ்பெக்டர், 40 எஸ்.ஐ.,க்கள், 125 போலீஸார், 75 ஊர்காவல் படையினர், 50 தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவியில் நீராடும் பக்தர்களை வெள்ளம் இழுத்து சென்றால், மீட்பதற்காக தீயணைப்பு, மீட்பு படையினர் ரப்பர் படகில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். உடனடி சிகிச்சை அளிப்பதற்காக பூங்கா அருகில் ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேட்டூர் ஆர்.டி.ஓ., சூர்யபிரகாஷ் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.