பதிவு செய்த நாள்
31
டிச
2015
11:12
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், இன்று, திருப்படித் திருவிழாவும், நாளை புத்தாண்டு சிறப்பு தரிசனமும் நடைபெறுகிறது. இதையொட்டி, 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு நடந்து செல்வதற்கு, 365 படிக்கெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓராண்டிற்கு, 365 நாட்கள் என்பதை குறிக்கும் வகையில், இங்கு 365 படிகள் அமைக்கப்பட்டுள்ளதால், ஆண்டுதோறும், டிச.31ம் தேதி, திருப்படித் திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது.அந்த வகையில், இன்று படித் திருவிழா, காலை, 8:00 மணிக்கு, சரவணப்பொய்கை அருகே, முதல் படிக்கட்டில், பூஜை துவங்குகிறது. தொடர்ந்து கோவில் நிர்வாகம், ஒவ்வொரு படிக்கெட்டிற்கும் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து பூஜை செய்யப்படும். காலை, 10:00 மணிக்கு, மலைக்கோவிலில், உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை உடன் வெள்ளி மயில் வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பஜனை குழுவினர் பக்தி பாடல்களை பாடியவாறு மலைப்படிகள் வழியாக சென்று மூலவரை வழிபடுவர். நள்ளிரவு, 12:01 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. நாளை, புத்தாண்டு தரிசனம் நடக்கிறது. படித் திருவிழா மற்றும் புத்தாண்டு தரிசனத்திற்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் முருகன் மலைக்கோவிலுக்கு வந்து மூலவரை தரிசிப்பதால், எஸ்.பி., சாம்சன் தலைமையில், 750க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.மேலும், விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், நகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் செய்து வருகின்றனர்.