பதிவு செய்த நாள்
10
ஆக
2011
10:08
திருவனந்தபுரம்: பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள பொக்கிஷங்கள் அதே இடத்திலேயே ரகசியமாக பாதுகாக்கப்படவேண்டும் என்றும், கோவில் ஆசார அனுஷ்டானங்கள் குறைந்து வருவதாகவும், அதனால் மூலவர் வேதனையில் இருப்பதாகவும் நேற்று நடத்தப்பட்ட தாம்பூல தேவபிரசன்னத்தில் கண்டறியப்பட்டது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், பிரசித்திப் பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் பாதாள அறைகளில், பல ஆண்டுகளாக பாதுகாக்கப்படும் பொக்கிஷங்கள் கடந்த மாதம் கணக்கிடப்பட்டது. இதை அடுத்து, சுப்ரீம் கோர்ட் நியமித்த ஐந்துபேர் கொண்ட குழு, தற்போது கோவில் பொக்கிஷங்கள் குறித்து மதிப்பீடு செய்ய இங்கு வந்துள்ளது. மதிப்பீடு பணிகள் துவங்குவதற்கு முன்பாக, இதுகுறித்து சுவாமியின் அனுமதி பெற தேவபிரசன்னம் நடத்த திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரும், கோவிலை நிர்வகித்து வரும் அறக்கட்டளையும், அக்குழுவிடம் அனுமதி கோரினர். கோவில் ஆசார அனுஷ்டானங்கள் செய்வதற்கு தடை ஏதும் இல்லை என ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளதால், நேற்று முன்தினம் பிற்பகல் தேவபிரசன்னம் நிகழ்ச்சி, கோவிலுக்கு எதிரே உள்ள குலசேகர மண்டபத்தில், நாடகசாலையின் முகப்பு பகுதியில் அஷ்டமங்கல தேவபிரசன்ன நிகழ்ச்சி துவங்கியது.
கோவில் தந்திரி தரணநல்லூர் பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு முன்னிலையில், ஜோதிட வல்லுனர்கள் நாராயணரங்க பட், பத்மநாப சர்மா, ஹரிதாஸ் மற்றும் தேவிதாஸ் ஆகியோர் தலைமையில் நிகழ்ச்சி நடந்தது. முதலில் ராசி பூஜை நடத்தப்பட்டது. அதில் பல அவலட்சணங்கள் (எதிர்மறைவானவை) தென்பட்டன. இந்நிலையில், நேற்று காலை மீண்டும் துவங்கிய இந்நிகழ்ச்சியில் தாம்பூல தேவபிரசன்னம் நடத்தப்பட்டது. இதில், கோவில் பாதாள அறைகளில் வைக்கப்பட்டுள்ள பொக்கிஷங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படவேண்டும் என்றும், எக்காலத்திலும் இவற்றுக்கு பாதிப்பு வராது என்றும், அவை தற்போதுள்ள நிலையிலேயே கோவிலிலேயே பாதுகாக்கப்படவேண்டும் என்றும் சுவாமியின் உத்தரவாக தெரியவந்துள்ளது.
கோவிலில் தற்போது ஆசார அனுஷ்டானங்கள் குறைந்து வருவதால், மூலவர் வேதனையில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இக்கோவிலுக்கென உள்ள தர்மவிதிகள் மீறப்பட்டு உள்ளதாகவும், தாம்பூல தேவபிரசன்னத்தில் தெரியவந்துள்ளது. இந்நிகழ்ச்சி இன்றுடன் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், இன்று காலை சுப்ரீம் கோர்ட் நியமித்த ஐவர் குழு, கோவிலில் பொக்கிஷங்கள் மதிப்பீடு செய்வது குறித்தும், அதற்கான பணிகளை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்தும், தேவபிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளது.