பதிவு செய்த நாள்
10
ஆக
2011
11:08
ரமலான் காலத்தில் மட்டுமல்ல! எந்த மாதமாயினும், தொழுகைக்கு நாம் முந்திக் கொள்ள வேண்டும். இதுபற்றி நபிகளார் நவில்வதைக் கேட்போமா!
"தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் வானத்தில் வாசல்கள் திறக்கப்படும். பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும். தொழுகையின் முன்வரிசையின் சிறப்பை நீங்கள் அறிந்தால் நிச்சயமாக நீங்கள் (அதற்காக) சீட்டுக்குலுக்கி முந்திக்கொள்ள முனைவீர்கள்.
"தொழுபவர் அல்லாஹ்விடம் நேரடியாக பேசுகிறார். இகாமத்தை நீங்கள் செவியுற்றால் தொழுவதற்கு நடந்து வாருங்கள். நிதானத்தையும் அமைதியையும் மேற்கொள்ளுங்கள். ஓடிவராதீர்கள். (ஜமா அத்தில்) பெற்றுக் கொண்ட அளவு தொழுது கொள்ளுங்கள், என்கிறார்கள் நாயகம்(ஸல்) அவர்கள்.
ஒருசமயம், நபித்தோழர் ஒருவர், "தக்பீர் தஹ்ரீமா முதல் தக்பீரை தவறவிட்டு, ஜமா அத் தொழுகையில் கலந்து கொண்டார். தொழுகை முடிந்தபின் அவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம், ""பெருமானாரே! நான் தக்பீர் தஹ்ரீமாவை தவற விட்டுவிட்டேன். அதற்கு ஈடாக நான் என்ன செய்ய வேண்டும்? என்னிடம் உள்ள நான்கு ஒட்டகைகளின் சாமான்களை ஈடாக கொடுப்பதால் தக்பீர் தஹ்ரீமாவின் நன்மை கிடைக்குமா? என்று வினவிய போது, ""நான்கு ஒட்டகைகளின் சாமான்கள் என்ன, நாற்பது ஒட்டகைகளின் சாமான்களை நீர்தருமமாகக் கொடுத்தாலும் தக்பீர் தஹ்ரீமாவுக்கு ஈடாகாது என்றார்கள் நபிகளார்.
அதுமட்டுமின்றி, ""தொழுபவரின் குறுக்கே செல்பவர் அதனால் தனக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால், தொழுபவரின் குறுக்கே செல்வதற்குப்பதிலாக நாற்பது நாட்கள் ஆனாலும் அங்கேயே நின்று கொண்டிருப்பது அவருக்கு சிறந்ததாக தோன்றும், என்று தொழுகையின் மகிமையை உயர்த்திப் பேசினார்கள்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.47 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.31 மணி.