பதிவு செய்த நாள்
11
ஆக
2011
10:08
நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், மூலவரை அருகில் இருந்தபடி தரிசனம் செய்யும் ஏற்பாட்டின் மூலம், செல்வாய், புதன் ஆகிய இரு நாட்களில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருமலை கோவிலில் வார நாட்களில் செவ்வாய், புதன்கிழமைகளில் வெங்கடேச பெருமாளை, 30 அடி தூரத்திலிருந்து தரிசிக்கும் புதிய நடைமுறையை, திருப்பதி தேவஸ்தானம் கடந்த ஆண்டு அமல்படுத்தியது. மூலவரை அருகில் இருந்து தரிசிக்கும் இந்த வசதிக்கு, இலவச கியூ, பாதயாத்திரை, 50 ரூபாய் சிறப்பு தரிசனம் மற்றும் 300 ரூபாய் சிறப்பு நுழைவு கட்டண பக்தர்களிடம் தொடர்ந்து பெரும் வரவேற்பு கிடைத்து வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வார நாட்களில் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். மற்ற தினங்களில் குறைந்த அளவிலான பக்தர்கள் திருமலைக்கு வருவதால், செவ்வாய், புதன் கிழமைகளில் வரும் பக்தர்கள், மூலவரை அருகில் இருந்தபடி தரிசனம் செய்யும் புதிய நடைமுறையை தேவஸ்தான நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களிலும் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். அதேபோன்று, அருகில் இருந்தபடி தரிசனம் செய்யும் (லகு தரிசனம்) மூலம் ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதன் மற்றும் வியாழன்று அதிகாலை வரை லட்சம் முதல் ஒன்றரை லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நடைமுறை மூலம் நேற்று முன்தினம் (செவ்வாயன்று) 40 ஆயிரம், நேற்று (புதனன்று) 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேற்று (புதனன்று) மாலை நிலவரப்படி, வைகுண்டம் கியூ காம்ப்ளக்சின் அனைத்து வளாகங்களும் நிரம்பிய நிலையில், கோவிலுக்கு வெளியிலும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். 300 ரூபாய் சிறப்பு நுழைவு டிக்கெட் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருமலை கோவிலில் செவ்வாய்க் கிழமை முதல் நடந்து வரும் பவித்ர உற்சவத்தை காணவும் ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.