பதிவு செய்த நாள்
13
ஜன
2016
11:01
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் கிருபாபுரீஸ்வரரை தென்பெண்ணையாற்றில் நடக்கும் தீர்த்தவாரிக்கு கொண்டு செல்லவேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணையாற்றில், ஆண்டுதோறும் தை மாதம் 5ம் தேதியன்று, ஆற்றுத்திருவிழா நடக்கிறது. இதில், பல்வேறு ஊர்களை சேர்ந்த சுவாமிகளை கொண்டுவந்து தீர்த்தவாரி செய்து, ஊர்வலமாக ஊருக்கு கொண்டு செல்வது வழக்கம்.மணலுார் பேட்டை, திருக்கோவிலுார், ஏனாதிமங்கலம், பேரங்கியூர், பிடாகம், கண்டரக்கோட்டை ஆகிய ஊர்களில் ஆற்றுத்திருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. மணலுார்பேட்டையில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர், திருக்கோவிலுாரில் வீரட்டானேஸ்வரர், அதுல்யநாதேஸ்வரர், பேரங்கியூரில் பரிக்கல் லட்சுமிநரசிம்மர் உள்ளிட்ட பிரசித்திப் பெற்ற கோவில்களின் உற்சவர்களுக்கு தீர்த்தவாரி நடக்கிறது. திருவெண்ணெய்நல்லுாரில், சுந்தரரை தடுத்தாட்கொண்டு அருளாசி வழங்கிய சிறப்புடைய கிருபாபுரீஸ்வரர் கோவிலிலிருந்து உற்சவரை, ஏனாதிமங்கலம் அல்லது பேரங்கியூரில் நடக்கும் தீர்த்தவாரிக்கு கொண்டு செல்ல வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுந்தரர் பாடிய தேவாரத்தின் ௧௦ பதிகங்களில், பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லுார் அருட்டுறையுள்... என, தென் பெண்ணையாற்றை குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருவெண்ணெய்நல்லுார் கிருபாபுரீஸ்வரரை, பெண்ணையாற்றில் நடக்கும் தீர்த்தவாரிக்கு கொண்டு செல்லாமல் இருப்பது வேதனையளிப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பு.