அம்பாத்துறை கோயிலில் யாகம் நடத்த தடை பக்தர்கள் ஏமாற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2016 02:01
சின்னாளப்பட்டி: அம்பாத்துறை பத்ரகாளியம்மன் கோயிலில் அமாவாசை யாகம் நடத்த அறநிலைய துறையினர் தடை விதித்ததால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
அம்பாத்துறையில் பழமையான பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு சொந்தமான நகைகள், நிலங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் முறையாக பாதுகாக்கப் படாததால் ஆக்கிரமிப்பாளர்கள் சிலரின் பிடியில் சிக்கியுள்ளன. இங்கிருந்த பூசாரி பணி நீக்கம் செய்யப்பட்டு 20 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை புதிய அர்ச்சகர் நியமிக்கப்படவில்லை. ஒருகால பூஜைக்காக மாதந்தோறும் வழங்கிய ரூ.ஆயிரம் நிறுத்தப்பட்டு பல மாதங்களாகிறது.
யாகத்திற்கு தடை: இத்தனை பிரச்னைகளுக்கு மத்தியிலும் பக்தர்கள் முயற்சியால், அமாவாசை நாட்களில் யாகம் நடந்து வந்தது. உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். இந்நிலையில் தகுந்த முகாந்திரம் ஏதுமின்றி, அறநிலைய துறையினர் யாகம் நடத்த கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் ஒவ்வொரு அமாவாசையன்றும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
ஆன்மிக வழிபாடுகளை முடக்கி வைத்துள்ள அறநிலைய துறையின் செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பூசாரி நியமிக்கப்பட வேண்டும், ஒருகால பூஜைக்கான உதவி தொகை வழங்கப்பட வேண்டும். அமாவாசை யாகம் நடத்த அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.