திருப்புவனத்தில் சிறுவர்களின் சித்திரை திருவிழா, பொதுமக்கள் ஆச்சர்யம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஏப் 2026 03:04
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது .
தென் மாவட்ட மக்களின் முக்கிய திருவிழாவான சித்திரை திருவிழா நேற்று மதுரையில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது . மதுரை அழகர்கோயிலில் இருந்து கள்ளழகர் வேடம் பூண்டு மதுரையில் சகோதரி திருமணத்தை காண வரும் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு தொன்று தொட்டு நடந்து வருகிறது. இந்தாண்டு மே 1ம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்க உள்ளார். அழகர்கோயிலில் இருந்து சீர்பாதம் தாங்கிகள் என அழைக்கப்படும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அழகரை சுமந்து வருவார்கள், இதற்காக விரதம் இருந்து அழகரை தூக்கி வருவது வழக்கம், இதில் குறிப்பிட்ட சதவிகிதம் பேர் திருப்புவனத்திலும் வசிக்கின்றனர். வருடம் தோறும் அழகரை சுமக்க இவர்கள் செல்வர்கள். இவர்கள் முன்கூட்டியே திருப்புவனத்தில் சித்திரை திருவிழா கொண்டாடியே பின்னரே அழகரை சுமக்க செல்வார்கள்.
இவர்களை பார்த்து திருப்புவனம் பகுதி சிறுவர்களும் தங்கள் சேமிப்பில் இருந்து சித்திரை திருவிழா கொண்டாடுகின்றனர். இதற்காக தங்கப்பல்லக்கில் கள்ளழகர் வருவது, வழிநெடுகிலும் பக்தர்கள் வரவேற்பது, பின் வைகை ஆற்றில் எழுந்தருள்வது என அனைத்து நிகழ்வுகளையும் வரிசை மாறாமல் செய்கின்றனர். நேற்று காலை அழகரை சுமந்து நகரின் பல்வேறு வீதிகளின் வழியாக சென்று வைகை ஆற்றில் இறங்கினர் .
பொதுமக்கள் கூறுகையில்: கோடை விடுமுறையில் செல்போன், இண்டெர் நெட், இன்ஸ்டாகிராம், முக நூல் உள்ளிட்டவற்றால் இளையதலைமுறையினர் வசம் திருவிழாக்கள் பற்றிய எதிர்பார்ப்புகள், ஆர்வங்கள் குறைந்து விட்டாலும் சித்திரை திருவிழா மட்டும் குறைவதே இல்லை. ஒவ்வொரு வருடமும் அழகரை காண வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இதற்கு சாட்சியாகும், திருப்புவனத்தைச் சேர்ந்த சிறுவர்கள் தங்கள் சேமிப்பு பணத்தில் இருந்து சித்திரை திருவிழாவை நடத்தி வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, என்றனர்.