ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் புதியதாக அமைக்கப்பட்ட வடக்கு, தெற்கு கோபுரங்களுக்கு கலசங்கள் பொருத்தும் பணி நேற்று துவங்கியது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கிழக்கு ராஜகோபுரம், மேற்கு கோபுரம் மட்டும் முழுமையாக கட்டப்பட்டு இருந்தன. வடக்கு, தெற்கு கோபுரங்கள் 20 அடி உயர அடித்தளத்துடன் முழுமை பெறாமல் இருந்தன. அவை 400 ஆண்டுகளாக மொட்டை கோபுரங்களாக இருந்தன. நன்கொடையாளர்கள் மூலம் 2014ல் வடக்கு, தெற்கு புதிய கோபுரங்கள் கட்டும் பணி துவங்கியது. தற்போது தலா 5 நிலைகளுடன் கோபுரங்கள் அமைக்கப்பட்டு ஐவெரி கலரில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. ஜன., 20ல் நான்கு கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.இதற்காக புதிய கோபுரங்களுக்கு தலா 5 கலசங்கள் பொருத்தப்படுகின்றன. ஒவ்வொன்றும் 5 அடி உயரம் உள்ளன. நேற்று கலசங்கள் பொருத்தும் பணி துவங்கியது. அவற்றிற்கு கோயில் குருக்கள் பூஜை செய்தனர். பின் அவற்றை கோபுர உச்சியில்நிர்மாணம் செய்யும் பணியில் ஸ்தபதிகள் ஈடுபட்டு உள்ளனர். இப்பணி ஓரிரு நாட்களில் முடியும். முதன்முறையாக 4 கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடப்பதால் ஆன்மிக மடாதிபதிகள், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.