பதிவு செய்த நாள்
18
ஜன
2016
12:01
கோவை: பொங்கல் இசை விழாவின் நிறைவாக, ஆர்.எஸ்.புரம், பாரதிய வித்யா பவன் பள்ளியில், நீர்வளம், நிலவளம் செழிக்க, தியாகராஜ ஆராதனை இசை நிகழ்ச்சி நேற்று நடந்தது. பாரதிய வித்யா பவன் சார்பில், 21வது பொங்கல் இசை விழா மற்றும் மறைந்த கர்நாடக இசைக்கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமி நுாற்றாண்டு விழா முன்னிட்டு, இசை நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு நாளும், பிரபல இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடந்தன. கடந்த, 13ம் தேதியில் துவங்கிய இசை விழா நேற்றோடு நிறைவடைந்தது. கர்நாடக இசை பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியை நினைவுக்கூர்ந்து கவுரவிக்கும் வகையில், சிறப்பு சொற்பொழிவு நடந்தது. விழா நிறைவாக, நேற்று காலை, 9:00 மணிக்கு சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆராதனை நடந்தது. தியாகராஜ ஆராதனையில், நீர்வளம், நிலவளம் குன்றாமல், உலக மக்களின் வாழ்வு வளமடைய வேண்டும் என வேண்டுதலுடன் தியாகராஜரின் பாடல்கள் இசைக்கப்பட்டன. இதில், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.