ஆட்டையாம்பட்டி: சேலம் அருகேயுள்ள வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி சுற்றியுள்ள கிராமங்களில் காணும் பொங்கல் கரி நாளையொட்டி, முன்னோர்களை நினைவு கூர்ந்து சமாதிகளை சுத்தம் செய்து கிராம மக்கள் வழிபட்டனர். தை மாதத்துக்கு முதல் நாள் போகி பண்டிகை என்ற பெயரில், தங்கள் வீடுகளை சுத்தம் செய்து காப்பு கட்டி அலங்கரிக்கின்றனர். தை முதல் நாளில் சூரிய பொங்கல் வைத்து இயற்கைக்கு நன்றி செலுத்துகின்றனர். அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் என்ற பெயரில் கால்நடைகளை குளிப்பாட்டி, அலங்கரித்து அவைகளுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்துகின்றனர். மாட்டுப்பொங்கலுக்கு அடுத்த நாள் காணும் பொங்கல் கரி நாள் கொண்டாடப்படுகிறது. வீரபாண்டி, நைனாம்பட்டி சுற்றியுள்ள பகுதிகளில், இறந்த முன்னோர்கள் நினைவாக, விவசாய நிலங்கள் மற்றும் இடுகாடுகளில் உள்ள சமாதிகளை சுத்தம் செய்து, சுண்ணாம்பு அடித்து வண்ண பொடிகளை தூவினர். பின்னர், மலர்களால் அலங்கரித்தும் பொங்கல் வைத்தும் கிராமத்தினர் நன்றி செலுத்தினர்.