பதிவு செய்த நாள்
01
பிப்
2016
11:02
திருத்தணி: திருத்தணி உற்சவர் முருகப் பெருமான், தரணி வராகபுரம் கிராமத்தில் நேற்று வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி அடுத்த, தரணிவராகபுரம் கிராமத்தில், ஆண்டுக்கு ஒரு முறை உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வீதி உலா வருகிறார். அந்த வகையில், நேற்று மாலை, மலைக்கோவிலில் இருந்து, படிகள் வழியாக உற்சவர் முருகப் பெருமான் திருக்குளம் வந்தடைந்தார். பின், அங்கிருந்து டிராக்டர் மூலம், சன்னிதி தெரு, அக்கைய்யா நாயுடு தெரு, சித்துார் சாலை, புறவழிச் சாலை வழியாக தரணிவராகபுரம், கிராமத்திற்கு, மாலை, 6:30 மணிக்கு சென்றடைந்தார். இரவு, 7:30 மணிக்கு, அந்த கிராமத்தில் உள்ள ராமர் கோவில் வளாகத்தில், உற்சவருக்கு பால், பன்னீர், தேன், இளநீர் போன்ற அபிஷேக பொருட்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வண்ண மலர்களால், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் கிராமம் முழுவதும் உள்ள வீதிகளில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.