பதிவு செய்த நாள்
01
பிப்
2016
11:02
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், சுவாமி தரிசனத்துக்கு கட்டணம் என்ற பெயரில் புதிய அறிவிப்பு ஒன்றை, கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், துர்க்கையம்மன் கேட் வழியாக சென்று, மூலவரை தரிசனம் செய்ய ஒருவருக்கு, 50 ரூபாய் கட்டணம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மூலவர் மற்றும் அம்மன் சன்னிதிகளில் அமர்வு தரிசனம் செய்ய, ஒருவருக்கு, 250 ரூபாய்; சண்டிகேஸ்வரி கேட் வழியாகச் சென்று, அம்மனை தரிசனம் செய்ய, ஒருவருக்கு, 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணங்கள் எல்லாம் சாதாரண நாட்களில் மட்டுமே வசூலிக்கப்படும். இது குறித்து ஆட்சேபனை இருந்தால் அலுவலகத்திற்கு எழுத்து மூலமாக தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், பக்தர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: கடவுளை வணங்க வரும் பக்தர்களை, பணத்தின் மூலம் பிரித்து பார்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. கோவிலில், சிவாச்சாரியார்கள் முதல் நிர்வாகத்தில் இருப்பவர்கள் வரை, பணம் பறிக்கும் நோக்கத்திலேயே செயல்படுகின்றனர். மாதந்தோறும், 1 கோடி ரூபாய் வரை உண்டியல் மூலம் கிடைக்கும் காணிக்கையை முறையாக பயன்படுத்துவது இல்லை. பக்தர்களுக்கு எந்த வசதியும் செய்து கொடுப்பது கிடையாது; பிரசாதமும் தரமாக இல்லை. இந்நிலையில் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கும் வகையில் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனத்துக்கு புதிய கட்டணம் என்ற பெயரில், பக்தர்களை துன்புறுத்தக் கூடாது.