பதிவு செய்த நாள்
03
பிப்
2016
11:02
தஞ்சாவூர்: கும்பகோணம், மகாமகக் குளத்தில் நீராடும்போது, 20 புண்ணிய தீர்த்தங்களில் நீராடியதாக நம்பப்படுகிறது. இது குறித்து, வடமொழி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் உள்ள, பிரம்ம தீர்த்தேச்சுரர் கோவிலில், வரைபடத்துடன் தீர்த்தத் துறைகளின் பெயர்களுடன், வடமொழிக் கல்வெட்டு இருப்பதை, கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் கண்டுபிடித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கி.பி., 1600-1645 வரை ஆட்சி செய்த தஞ்சாவூர் ரகுநாத நாயக்கர், அவருடைய மகாபிரதானி கோவிந்த தீட்சிதர் வழிகாட்டுதலோடு, 16 வகையான தானங்களை மகாமகக் குளக்கரையில் செய்தார். அப்போது, கரைகளைப் பலப்படுத்தி, படிக்கட்டுகள் அமைத்து, கரைகளின், நான்கு திசையிலும், 16 சிறிய சிவாலயங்களையும், 16 தான மண்டபங்களையும் கட்டினார். குளத்தில் உள்ள 20 தீர்த்தங்கள் எவை என்பதை, குளத்தின் வரைபடத்தை காட்டி, ஒவ்வொரு படித் துறையும் ஒரு தீர்த்தம் என, சமஸ்கிருத எண்களைக் கல்வெட்டாக எழுதி, அவற்றின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளனர். கல்வெட்டில் காணப்பெறும் வரைபடத்திற்கு, மேலாக, மகாமக தடாகஸ்த தீர்த்தானி என்ற தலைப்பிட்டு, அதன் கீழாக, 20 தீர்த்தங்களின் பெயர்களையும் குறிப்பிட்டு உள்ளனர். இந்த வரைபடத்தையும், குறிப்புகளையும் கல்லில் பொறிக்கச் செய்தவர், கும்பகோணத்தைச் சேர்ந்த குரு ராஜாச்சாரியர் என்பது குறிக்க பெற்றுள்ளது. குளத்தினுள் காணப்பெறும் கிணறுகள்தான், குறிப்பிட்ட தீர்த்தங்கள் எனக் கருதுவது தவறு என்றும், கங்கை நதிக்கரையில், காசியில் இருப்பது போன்று இங்கும் படித்துறைகள் இருக்கும் இடங்களே, 19 தீர்த்தங்களாகவும், குளத்தின் நடுவில், 66 கோடி தீர்த்தம் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.