பதிவு செய்த நாள்
20
ஆக
2011
10:08
புதுடில்லி: "பத்மநாபசுவாமி கோவில் ரகசிய அறைகளில், இன்னமும் திறக்கப்படாமல் உள்ள ஆறாவது அறையை திறக்க அனுமதிக்கக்கூடாது எனக்கோரி, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர், நேற்று காலை சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், "பத்மநாபசுவாமி கோவிலில் இதுவரை திறக்கப்படாத "பி அறையை திறக்கக் கூடாது. பொக்கிஷங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனுமதிக்கக் கூடாது. பாதாள அறைகளை திறப்பது, பல்வேறு ஆபத்துக்களை உருவாக்கி விடும் என, தேவ பிரசன்னத்தில் கண்டறியப்பட்டுள்ளது. பொக்கிஷங்களை பார்வையிடுவதற்கு முன், ஐவர் குழுவினர் உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் நியமித்த ஐவர் குழு, திருவனந்தபுரம் கோவிலில் பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய தயார் நிலையில் இருக்கும்போது, இம்மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மனு விரைவில் விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை நடந்தது என்ன? : கேரளா திருவனந்தபுரத்தில், பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் பூமிக்கடியில் உள்ள ஆறு ரகசிய அறைகளில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஐந்து அறைகளை, சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட குழு ஏற்கனவே திறந்து பார்த்து, கணக்கெடுப்பு நடத்தியது. ஆனால், அந்தக் குழுவினர் ஆறாவது அறை (பி அறை)யை மட்டும் திறந்து பார்க்காமல் விட்டு விட்டனர். இதையடுத்து, கோவில் ரகசிய அறைகளில் கண்டு பிடிக்கப்பட்ட பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய, ஐந்து பேர் கொண்ட குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது. தேசிய அருங்காட்சியக துணைவேந்தர் டாக்டர் ஆனந்தபோஸ் தலைமையிலான இக்குழு, தற்போது திருவனந்தபுரத்தில் கோவிலின் பாதுகாப்பு உட்பட பல்வேறு பணிகளை ஆய்வு செய்து வருகிறது. பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் முன்பாக, சுவாமியின் கருத்தை கேட்பதற்காக தேவ பிரசன்ன நிகழ்ச்சி நடந்தது. இதில், கோவிலில் பல்வேறு தோஷங்கள் இருப்பதும், சுவாமி அதிருப்தியில் இருப்பதும், தோஷ பரிகாரங்கள் செய்ய வேண்டியிருப்பதும் கண்டறியப்பட்டது. இதன்பின், தேவ பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்டபடி, கோவிலில் பரிகார பூஜைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில்தான் மன்னர் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.