பதிவு செய்த நாள்
20
ஆக
2011
10:08
பீர்மேடு: மகர ஜோதி உற்சவம் துவங்குவதற்கு முன்னரே, தமிழக - கேரள எல்லையில் உள்ள இரு ஊராட்சிகளில், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என, புல்மேடு துயர சம்பவம் பற்றி விசாரிக்கும் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.கேரளா பத்தனம் திட்டா மாவட்டம், சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் மகரஜோதி தரிசனத்தில் கலந்து கொள்ள நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவர். இந்தாண்டு ஜனவரி 14ம் தேதி, ஜோதி தரிசனம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள், தமிழக - கேரள எல்லை அருகே, புல்மேடு பகுதியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கினர். இச்சம்பவத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக உட்பட பல மாநிலங்களைச் சேர்ந்த, 104 பக்தர்கள் பலியாயினர். இந்தத் துயர சம்பவம் குறித்து, நீதிபதி ஹரிஹரன் நாயர் தலைமையிலான கமிஷன் விசாரித்து வருகிறது. இக்கமிஷன் தற்போது, புல்மேடு அருகே உள்ள பல கிராமங்களுக்கு, நேரில் சென்று விசாரணை நடத்துகிறது. நேற்று முன்தினம், தமிழக - கேரள எல்லையையொட்டிய பருந்துப்பாறா மற்றும் பாஞ்சாலி மேடு கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டது.இவ்விரு கிராமங்களிலும் அய்யப்ப பக்தர்கள் தங்குவது வழக்கம். இங்கு அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என, கமிஷன் கண்டறிந்தது. இதையடுத்து, இரு ஊராட்சிகளிலும் சபரிமலை பக்தர்களுக்காக, அடிப்படை வசதிகளான குடிநீர், உணவு, இரவு நேரத்திலும் அதிக வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகள் ஆகியவற்றை ஏற்படுத்தித் தரவேண்டும். இவற்றை எல்லாம், மகரஜோதி உற்சவம் துவங்குவதற்கு முன்பாகவே செய்து தர வேண்டும். இதற்குரிய நடவடிக்கைகளை இரு ஊராட்சிகளும் உடனே மேற்கொள்ள வேண்டும் என, உத்தரவிட்டது. இதற்காக, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, வருவாய் துறை, அய்யப்ப சேவா சங்கம் ஆகியவற்றின் உதவிகளை பெறலாம் என்றும் தெரிவித்தது. மேலும், கிராம மக்களிடம் நீதிபதி பல்வேறு விளக்கங்களை கேட்டறிந்தார்.