பதிவு செய்த நாள்
29
பிப்
2016
11:02
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சிவராத்திரி விழா நேற்று கொடியேற்றுடன் துவங்கியது. வரலாற்று சிறப்புமிக்க ராமநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தை, மாசி, ஆடி மாதத்தில் திருவிழா நடப்பது வழக்கம். மாசி சிவராத்திரி விழா நேற்று துவங்கியது. சுவாமி சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடி ஏற்றபட்டது. தொடர்ந்து சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. விழாவையொட்டி தினமும் தங்கம், வெள்ளி வாகனம், பல்லக்கு ஆகியவற்றில் சுவாமி, அம்மன் வீதியுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 7ல் தேரோட்டம் நடக்கிறது. சர்வ அலங்காரத்தில் சுவாமி, அம்மன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலிக்கிறார். மார்ச் 8ல் தீர்த்தவாரி நடக்கிறது. இதற்காக மதியம் 12 மணிக்கு சுவாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடலில் எழுந்தருள்கிறார். விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செல்வராஜ் செய்து வருகிறார்.
* ராமநாதபுரம் வெளிப்பட்டணம் முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோயிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று காலை 5.30 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 9.45 மணிக்கு கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. தினமும் காலை அம்பாள் வீதியுலா, இரவு மயில், காமதேனு, யானை, சிம்மம், அன்னம், ரிஷபம், குதிரை வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. மார்ச் 7 காலை 9.30 மணிக்கு தேரோட்டம், மார்ச் 9 காலை 9.30 மணிக்கு பால்குடம், இரவு 10 மணிக்கு புஷ்ப பல்லக்கு வீதியுலா நடக்கிறது. தினமும் இரவு ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை வெளிப் பட்டணம் ஆயிர வைசிய மகாஜன சங்க நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்துள்ளனர்.