திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் கோயிலில் "சாவி காணாததால் தங்கத் தேர் இழுக்கும் நிகழ்ச்சி ரத்தானது.இங்கு வரும் பக்தர்கள் நேர்த்திக் கடனாக தங்கத் தேர் இழுப்பது வழக்கம். இதற்கு ரூ. 2 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். நேற்று நகரத்தார் பக்த நெறிமன்றம் சார்பில், தங்கத் தேர் இழுக்க பதிவு செய்திருந்தனர். இரவு 6.30 மணிக்கு பக்தர்கள் வந்துவிட்டனர். ஏழு மணி ஆனதும் தங்கத் தேர் இழுக்க வேண்டும். ஆனால், தங்கத் தேர் உள்ள அறையை திறப்பதாக தெரியவில்லை. இதுபற்றி கேட்டபோது, அறையின் சாவி தொலைந்து விட்டதாக தெரிவித்தனர். நீண்ட நேரமாக பட்டர்களும், நிர்வாகத்தினரும் தேடியும் இரவு 8.30 வரை சாவி கிடைக்கவில்லை. தேரை இழுப்பதில் பக்தநெறி மன்றத்தினர் உறுதியாக இருந்தனர்.கோயில் துணை கமிஷனர் செந்தில்வேலவன் மற்றொரு நாளில் இழுக்க அனுமதி தருவதாக உறுதியளித்தார். இதற்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து பாரிஜாதகக்காரர்கள் சுப்ரமணியசாமி,தெய்வானனையை தோளில் சுமந்து, திருவாச்சி மண்டபத்தை சுற்றி வந்தனர். தீபாராதனைக்குப் பின் பிரசாதம் வழங்கினர். துணைகமிஷனர் கூறுகையில், ""மாற்று சாவி கிடைத்ததும் கதவை திறக்கலாம். எனவே, பக்தநெறி மன்றத்தினருக்கு வேறொரு நாளில் தங்கரதம் இழுக்க வாய்ப்பு தரப்படும், என்றார்.