பதிவு செய்த நாள்
09
மார்
2016
12:03
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதி கோவில்களில், மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், மகா சிவாரத்திரியையொட்டி, நான்கு கால பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சி மகாலிங்கபுரம் விஸ்வகர்மா காமாட்சியம்மன் கோவிலில், சிறப்பு பூஜைகள் நேற்றுமுன்தினம் இரவு நடந்தன. தொடர்ந்து, சிவபெருமானுக்கு சிறப்பு அலங்காரம், ேஹாம பூஜைகள் இடம்பெற்றன. பொள்ளாச்சி ஆவலப்பம்பட்டி கரப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்றுமுன்தினம் இரவு 7:30 மணிக்கு அனுக்கிரஹம், விக்னேஸ்வர, கணபதி ேஹாமம், நவக்கிரஹ ேஹாமம், ஏகாதச ருத்ர ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. பாலக்காடு தாலுகா கோவிந்தாபுரத்திலுள்ள குபேர லிங்கேஸ்வரர் கோவிலில், இரவு, 10:00 மணிக்கு சிவராத்திரி பூஜைகள் நடந்தன.
பொள்ளாச்சி போலீஸ் குடியிருப்புக்கு பின்புறம், முத்துகுமாரசாமி லே–அவுட் ஜீவமுக்தி சிவாலயத்தில், நேற்றுமுன்தினம், காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், 10:00 மணிக்கு கொடியேற்றம், மாலை, 4:00 மணிக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. இரவு, 8:00 மணிக்கு முதற்கால பூஜை, 9:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, 11:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு, 12:00 மணிக்கு கூட்டு வழிபாடு, 3:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, 8 ம் தேதி காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, 8:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. சிங்காநல்லூர் பாலாற்றங்கரை சித்தாண்டீஸ்வரர் கோவில், வடுகபாளையம் அங்காள பரமேஸ்வரியம்மன் கோவில், கிணத்துக்கடவு வடசித்தூர் பிளேக் மாரியம்மன் கோவில் மற்றும் பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வடசித்துாரில் மகாசிவராத்திரி விழா: வடசித்துார் பிளேக் மாரியம்மன் கோவிலில், 38 ம் ஆண்டு மகாசிவராத்திரி விழா நடந்தது. இக்கோவிலில் விழாவையொட்டி, சிறப்பு பூஜையும், திருவிளக்கு பூஜையும், இரவு முழுவதும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் பக்தி சொற்பொழிவும் நடந்தன. முன்னதாக, நேற்றுமுன்தினம் காலை, 8.30 மணிக்கு மகாகணபதி பூஜையும், தொடர்ந்து நாமஜெபமும் தொடர்ந்து நடந்தது. மாலையில், ஜெகநாதசுவாமிகள் முன்னிலையில், 108 தீர்த்தக்குட பூஜையும், திருவிளக்கு மற்றும் அம்மன் அலங்கார பூஜையும், தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. நேற்று மாலை பாலாபிஷேக ஆராதனையுடன் விழா நிறைவுற்றது.
வால்பாறை: மகாசிவராத்திரி தினமான நேற்றுமுன்தினம் இரவு, வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதர் சன்னதியில் நான்கு கால பூஜைகள் நடந்தன. இரவு, 7:30 மணி முதல், 9:30 மணி வரை முதல் கால யாம பூஜையும், இரவு 11:30 மணி முதல் 12:30 மணி வரை இரண்டாம் கால யாம பூஜையும், நள்ளிரவு, 2:30 மணி முதல் 4:00 மணி வரை மூன்றாம் காலயாம பூஜையும், அதிகாலை, 5:00 மணி முதல், 6:00 மணி வரை நான்காம் காலயாம பூஜையும் நடந்தன. பின் அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் இடம்பெற்றன. சிறப்பு அலங்காரத்தில் காசிவிஸ்வநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன்கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கண்விழித்து சிவபெருமானை தரிசித்தனர். இதனால் கோவில் வளாகம் களைகட்டியது.