பதிவு செய்த நாள்
12
மார்
2016
11:03
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், நேற்று கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. ராசிபுரம் ரயில்வே ஸ்டேஷன் அருகில், காளியம்மன் திருக்கோவிலில், நேற்று காலை, 7 மணிக்கு மேல் கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மாலை, 6 மணிக்கு காளியம்மன் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* ராசிபுரம் அடுத்த, அரியாக்கவுண்டம்பட்டி கொங்கலம்மன் கோவில் அருகிலுள்ள சண்டி கருப்புசாமி, நாககன்னி கோவிலின் கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று, காலை, 7 மணிக்கு மேல் கடம் புறப்படுதல் நிகழ்ச்சியும், 8 மணிக்கு, சண்டி கருப்புசாமி, நாககன்னி சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
* மல்லசமுத்திரம் அடுத்த, பெரியகொல்லப்பட்டியில் எல்லம்மாள், போத்துராஜூலு, விநாயகர், ஜமத்னி முனிவர் உள்ளிட்ட சாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை, 10 மணியளவில், அனைத்து கோபுரங்களுக்கும் தீர்த்தம் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
* சேந்தமங்கலம் அடுத்த, மேற்கு சின்னகுளம் பகுதியில், நேற்று முன்தினம் காலை, 10 மணிக்கு, காவிரியாற்றிலிருந்து புனித நீர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. நேற்று காலை, கணபதி, மாரியம்மன் மற்றும் விநாயகர், முருகன், நவக்கிரகம், மதுரைவீரன், கருப்பசாமி ஆகிய சுவாமிகளுக்கு, கண்திறப்பு மற்றும் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன கும்பாபிஷேக விழாவும் நடந்தது.