பதிவு செய்த நாள்
12
மார்
2016
11:03
நாமக்கல்: நாமக்கல், நரசிம்ம சுவாமி கோவிலில், பங்குனி திருத்தேர் விழா, வரும், 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நாமக்கல் நகரின் மையத்தில் நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. புராண வரலாற்றுப்படி, அனுமனால் கொண்டுவரப்பட்ட சாளக்கிராமம், மலை வடிவில் நகரின் நடுவில் உள்ளது. கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி தேர்த்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விழா, வரும், 16ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 21ம் தேதி வரை, நாள்தோறும் காலை, 8 மணிக்கு, நரசிம்மர் மற்றும் அரங்கநாதர் சுவாமி திருவீதி உலாவும், காலை, 11 மணிக்கு, கமலாலயக் குளக்கரை கோவில் மண்டபத்தில் திருமஞ்சனமும், இரவு, 8.30 மணிக்கு மீண்டும் திருவீதி உலாவும் நடக்கிறது. 22ம் தேதி காலை, 8 மணிக்கு திருமஞ்சனம், பல்லக்கு புறப்பாடு, மாலை, 6 மணிக்கு, திருமாங்கல்ய தாரணம் நடக்கிறது. 23ம் தேதி, காலை, திருமஞ்சனம், பல்லக்கு புறப்பாடு, இரவு குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடக்கிறது. தொடர்ந்து, 24ம் தேதி காலை, 7.30 மணிக்கு, பேட்டை அரங்கநாதர் திருத்தேர் வடம்பிடித்தல், ஆஞ்சநேயர் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 25 முதல், 30ம் தேதி வரை, காலை, 8 மணிக்கு திருமஞ்சனம், இரவு, 8.30 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும் நடக்கிறது.