பதிவு செய்த நாள்
14
மார்
2016
10:03
சபரிமலை: சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. மாலை நேரத்தில் பெய்த மழையிலும் சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இன்று காலை கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.பங்குனி மாத பூஜை மற்றும் உத்திர திருவிழாவுக்காக நேற்று மாலை, 5:00 மணிக்கு மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி நடை திறந்தார். இந்த நேரத்தில் மழை பெய்தது. மழையில் நனைந்தபடி, ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனர். நடை திறந்து தீபம் ஏற்றிய பின் அனைவருக்கும் திருநீறு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இன்று நடைபெறும் கொடியேற்றத்துக்கான சுத்திகிரியைகளை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நடத்தினார். இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்யதரிசனம் மற்றும் அபிஷேகத்துக்கு பின்னர் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நெய்யபிஷேகத்தை ஆரம்பித்து வைத்தார். காலை, 9:30 மணிக்கு நெய்யபிஷேகம் நிறுத்தப்பட்டு, கொடியேற்றத்துக்கான சடங்குகள் தொடங்கியது. 10:20 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. 11:00 முதல் 12:00 மணி வரை மீண்டும் நெய்யபிஷேகம் நடைபெறும். இன்று முதல், 22ம் தேதி ஒன்பதாம் நாள் வரை தினமும் இரவு, 9:00 மணிக்கு ஸ்ரீபூதபலி நிகழ்ச்சியும், நாளை முதல் 22-ம் தேதி வரை தினமும் பகல், 12:00 மணிக்கு உற்சவபலியும் நடக்கிறது. 23-ம் தேதி பம்பையில் ஆராட்டு நடக்கிறது. அன்று இரவு ஆராட்டு பவனி சன்னிதானம் வந்ததும், திருக்கொடி இறக்கப்பட்ட பின், 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். கோடை வெப்பம் கடுமையாக இருந்த நிலையில், நேற்று மாலை, 4:00 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும் பெய்த மழை சுற்றுப்புறங்களை ஓரளவு குளிர செய்தது. இதனால் பக்தர்கள் வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பினர்.