பதிவு செய்த நாள்
14
மார்
2016
10:03
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மாசி திருத்தேர் விழாவில் லட்சகணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த 7 ஆம் தேதி மகா சிவராத்திரியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் அமாவசையன்று மயான கொள்ளையும், 11ஆம் தேதி மாலை தீமிதி விழாவும் நடந்தது. முக்கிய விழாவான திருதிதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் ஸ்தல புராணத்தின் படி பிரம்மஹத்தி தோஷத்தால் பித்து பிடித்து அலையும் சிவபெருமன் மகா சிவராத்திரியன்று மேல்மலையனுார் மயானத்தில் வந்து தங்குகிறார். மறுநாள் இங்கு நடக்கும் மயானக்கொள்ளையின் போது விஸ்வரூபம் எடுக்கும் அங்காளம்மன் பிம்ம கபாலத்தை ஆட்கொள்கிறார். இதன் பிறகு ஈசனின் சாபம் நீங்கி ஆனந்த தாண்டவம் ஆடுகின்றார்.
விஸ்வரூபம் எடுக்கும் அங்காளம்மனின் கோபம் தனிய தேவர்கள் தேரின் பாகங்களாக இருந்து விழா எடுக்கின்றனர். இதையே மேல்மலையனுாரில் ஆண்டு தேறும் தேர் திருவிழாவாக நடத்துகின்றனர். இந்த விழாவில் அம்மனை தரிசிப்பவர்களுக்கு அனைத்து தெய்வங்களையும் வணங்கிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். நேற்று மாலை 4 மணிக்கு வடம் பிடித்தல் துவங்கியது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர். தேர் பவனியின் போது நேர்த்திகடன் செலுத்த காய்கனிகள், தானியங்கள், நாணயங்கள், உணவு பொருட்கள், பழங்களை தேரின் மீது வீசினர்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர்கள் நாகபூஷணி, பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் சேகர், அறங்காவலர்கள் ஏழுமலை, ரமேஷ், கணேசன், செல்வம், சரவணன், மணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கினர். விழுப்புரம் எஸ்.பி., நரேந்திரன் நாயர் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்தனர்.