பதிவு செய்த நாள்
14
மார்
2016
11:03
சென்னை: சுண்ணாம்பு கொளத்துார் சிவா - விஷ்ணு கோவில் கும்பாபிஷேகத்தின் போது, மூலவராக மரகத லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. சென்னை, கோவிலம்பாக்கம் அடுத்த சுண்ணாம்பு கொளத்துாரில் அமைந்து உள்ளது மரகதாம்பிகை சமேத மரகதீஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவில். திருக்குளம் வசதியுடன், 4.5 ஏக்கரில் அமைந்துள்ள கோவில், பல நுாறு ஆண்டுகளாக புனரமைக்கப்படாமல்,
கும்பாபிஷேகம் நடத்தாமல் இருந்தது.இந்நிலையில், 2008ம் ஆண்டு, அப்பகுதியை சேர்ந்தவர்களால் அறக்கட்டளை நிறுவப்பட்டு, கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 4.5 கோடி ரூபாய் செலவில் கோவில் புனரமைக்கப்பட்டு, வரும், 18ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. அப்போது, மரகதலிங்க மூலவர் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இதுகுறித்து, மரகதாம்பிகை டிரஸ்ட் தலைவர் மணிமாறன் கூறியதாவது:இந்த கோவில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. முன்பு ஒரு காலத்தில் இக்கோவில் தேரோட்டத்தின்போது, புயல், மழை வந்ததால், வீதியில் விட்டு பக்தர்கள் ஒதுங்கினர். அப்போது, தேர் உருண்டு ஓடி குளத்தில் மூழ்கியது.அதன் பிறகு கோவிலுக்கு செல்ல தயங்கினர். இதனால், கோவில் சிதிலம் அடைந்து போனது. தகவல் மூதாதையார் வழி கேட்டது. இதை கேரள பணிக்கரிடம் பிரசன்னம் உறுதிப்படுத்தியது. சிதிலமடைந்த கோவில் கர்ப்பக்கிரஹத்தை சீர்படுத்த முயன்றபோது, அங்கு முக்கால் அடி உயரம் கொண்ட பச்சை நிற சிவலிங்கம், விஷ்ணு சிலை மட்டும் கிடைத்தது. இது மரகத லிங்கம் என்பது தெரியவந்தது. கோவிலை ஆகம விதிப்படி புனரமைத்து கொடுத்த செல்வநாத ஸ்தபதியும் உறுதி ப் படுத்தினார். வரும், 18ம் தேதி நடக்கும் கும்பாபிஷேகத்தில் அந்த லிங்கத்தை மூலவராக பிரதிஷ்டை செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மரகத லிங்கத்தின் மகிமை: புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்க வடிவில் வழிபடுவது சிறந்தது என்று புராணங்கள் கூறுகின்றன. சிலைகளும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக, சில மன்னர்கள் மரகதக் கல்லில் லிங்கத்தை வடிவமைத்தனர். மரகத லிங்கத்தை வணங்குவதன் மூலம், சகல விதமான தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெற முடியும். மரகத லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்யும் பால், மருத்துவ சக்தியை கொண்டது. இரவில் மரகதலிங்கத்தின் மேல் சாற்றி, காலையில் வழங்கப்படும் சந்தனமும் மருத்துவ சக்தி வாய்ந்தது என கூறப்படுகிறது. - நமது நிருபர்