பதிவு செய்த நாள்
14
மார்
2016
11:03
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பங்குனி கோடை வசந்த உற்சவம் இன்று (மார்ச் 14) துவங்கி மார்ச் 23 வரை நடக்கிறது.கோயில் இணை கமிஷனர் நா.நடராஜன் கூறியதாவது: உற்சவ நாட்களில் கோயில் மற்றும் உபயதாரர்கள் சார்பில் மீனாட்சி அம்மன், சுவாமிக்கு தங்கரத உலா மற்றும் உபய திருக்கல்யாணம் பதிவு செய்து நடத்திட இயலாது. மார்ச் 23 பங்குனி உத்திரத்தன்று காலை 10 மணிக்கு மேல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடாகி, செல்லுார் திருவாப்புடையார் கோயிலில் எழுந்தருளி அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை முடிந்து பின் மாலையில் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்திலும், அம்மன் மரவர்ண சப்பரத்திலும் எழுந்தருளி கோயில் வந்து பின் சுவாமி சன்னதி பேச்சிக்கால் மண்டபத்தில் பாதபிட்சாடணம் ஆகிய தீபாராதனை முடிந்து சேத்தியாகும்.
திருக்கல்யாணம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் திருக்கல்யாண உற்சவம் மார்ச் 26ல் நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 4.00 மணிக்கு மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன், மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து புறப்பாடாகி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று, அங்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கும். மீண்டும் இரவு திருப்பரங்குன்றம் கோயிலிருந்து புறப்பாடாகி நள்ளிரவு, மீனாட்சி அம்மன் கோயில் வந்து சேத்தியாகும்.மார்ச் 26ல் அதிகாலை 4.00 மணிக்கு அம்மன், சுவாமி புறப்பாடாகி சென்று திரும்பி நள்ளிரவு வந்து சேர்த்தியாகும் வரை கோயில் நடைசாத்தப்பட்டு இருக்கும் என தெரிவித்துள்ளார். ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.