பதிவு செய்த நாள்
17
மார்
2016
12:03
மதுரை: மதுரையில் அடுத்த மாதம் நடக்கும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்கான செலவினங்களை ரூ.1.30 கோடியில் முடிக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இத்திருவிழாவையொட்டி வைகை ஆற்றில் தற்காலிக பாலம் அமைப்பது முதல் மக்களுக்கு குடிநீர், சுகாதார வசதிகள் மாநகராட்சி சார்பில் செய்யப்படும். கடந்த ஆண்டு இதற்கான செலவினங்கள் ரூ.ஒரு கோடியை தாண்டியது. இந்தாண்டு விழா செலவினங்களாக ரூ.1.30 கோடி மதிப்பீடாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஜன., 12 மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுகாதாரப்பிரிவு மூலம் துப்புரவு பணிகளுக்காகவும், துப்புரவு சாதனங்கள், கிருமி நாசினிகள் வாங்குதல் செலவினங்களுக்கு ரூ.34,44,485 ஒதுக்கப்பட்டுள்ளது. பொறியியல் பிரிவு மூலம் குடிநீர், வைகை தென்கரை ரோடு முதல் ஆழ்வார்புரம் வரை இருபுறம் தற்காலிக பாலம் அமைத்தல், மின்வசதிகள், தேனுார், வண்டியூர் பகுதிகளில் முன்னேற்பாடுகள் செய்தல், வைகை ஆற்றில் அழகர் இறங்கும் பகுதியில் மணல் பரப்புதல், பந்தல் அமைத்தல், தற்காலிக பாலம் அமைத்தல், மாசிவீதிகளில் ரோடுகள் செப்பனிடுதல் பணிகளுக்காக ரூ.69,05,500 ஒதுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் விழா ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைய அனுமதியை மாநகராட்சி கோரியுள்ளது. ஓரிரு நாட்களில் அனுமதி கிடைக்கும் என்பதால், முன்னோட்ட பணிகள் துவங்கியுள்ளன. இத்திருவிழா துவங்கி ஒரு மாதம் தமுக்கத்தில் பொருட்காட்சி நடக்கும். தேர்தல் கமிஷன் மதுரையில் பொதுக்கூட்டங்கள் நடக்கும் இடங்களின் பட்டியலில் இம்மைதானமும் சேர்க்கப்பட்டுள்ளது. சித்திரை பொருட்காட்சி நடத்துவதற்கான அனுமதியையும் கமிஷன் அளிக்க வேண்டும். பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு இதற்கான அனுமதி வழங்கினால் மாவட்ட நிர்வாகம் பொருட்காட்சியை நடத்தும்.