பதிவு செய்த நாள்
18
மார்
2016
12:03
இளையான்குடி: தாயமங்கலம் கோயில் பங்குனித்திருவிழா வரும் 28ம் தேதி துவங்குகிறது. இளையான்குடிகாளையார்கோவில் மெயின் ரோட்டிலுள்ள விலக்கில் இருந்து, இளையான்குடிசிவகங்கை ரோட்டில் உள்ள விலக்கு வரை விபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான வளைவுகள் உள்ளன. கல்வெட்டு பாலங்களை அடையாளம் காட்டும் போர்டுகளை சரி செய்ய வேண்டும் என பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். சிவகங்கை,ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்கள் உட்பட பல மாவட்டங்களை சேர்ந்த மக்கள் நேர்த்திக் கடனை செலுத்த வருவதுண்டு. இந்த ஆண்டு பங்குனித் திருவிழா மார்ச்28ல் துவங்க உள்ளது. இளையான்குடி காளையார்கோவில் மெயின் ரோட்டில் உள்ள விலக்கில் இருந்து தாயமங்கலம் வழியாக இளையான்குடிசிவகங்கை ரோட்டில் உள்ள விலக்கு வரை உள்ள 8.கி.மீ.,தூரத்தில் 20க்கும் மேற்பட்ட ஆபத்தான வளைவுகள், 30க்கும் மேற்பட்ட சிறிய கல்வெட்டு பாலங்கள் உள்ளன. 6 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த ரோட்டில் வளைவுகளிலும், கல்வெட்டு பாலங்கள் உள்ள இடங்களை காட்டும் அடையாள போர்டு இரும்பில் அமைக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் முன்னெச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டி விபத்துக்களை தவிர்த்து வந்தனர். சமூக விரோதிகள் சிலர் இந்த இரும்பு போர்டுகளை திருடிச் சென்றதால், தற்போது பல ஆபத்தான வளைவுகளிலும், சிறிய கல்வெட்டு பாலங்கள் உள்ள இடங்களிலும் அடையாள போர்டு இல்லை. திருவிழா காலங்களில் அதிக வாகனங்கள் வருவதால் விபத்து நடக்க வாய்ப்புள்ளது. இரவில் ஒளிரும் அடையாள போர்டுகளை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.