பங்குனி உத்திரம் என்றாலே காவடி வழிபாடுதான் நினைவுக்கு வரும். முருகப் பெருமானுக்கு காவடி எடுப்பதைப் பற்றி ஒரு புராணக்கதை உண்டு. அகத்தியர் கந்தகிரியில் - சிவகிரி, சக்திகிரி என்ற இரண்டு மலைகளைச் சிவ - சக்தியராகக் கருதி பூஜித்து வந்தார். அவற்றை அவர் பொதிகை மலைக்கு கொண்டு செல்லும் பொருட்டு முருகப் பெருமானின் அனுமதிபெற்று, அந்த மலைகளை எடுத்து வருமாறு இடும்பன் என்பவனைப் பணித்தார். இடும்பன் தன் மனைவி இடும்பியின் துணையுடன் பூர்ச்சவனத்தை அடைந்தான். அங்கு பிரம்மதண்டமும் அஷ்ட நாகங்களும் அவனிடம் வந்தன.
அஷ்ட நாகங்களால் உறிகளைச் செய்து, பிரம்ம தண்டத்தில் கோத்து இடும்பன் ஒரு காவடியைக் கட்டினான். மூலமந்திரத்தை உச்சரித்தபடியே அவன் மலைகளை எடுத்துக் காவடியில் வைத்தான். சுமந்து வரலானான். இடும்பன் திருவாவினன் குடிக்கு (பழநி) வந்தபோது மலைகள் மிகவும் கனத்தன. அதனால் காவடியைக் கீழே இறக்கினான். இளைப்பாறினான். இடும்பி கொடுத்த உணவுகளை உண்டான். மீண்டும் காவடியைத் தூக்க முனைந்தான். முடியவில்லை. அப்போது சிவகிரியில், குராமரத்தடியில் குமரன் நிற்பதை கண்டான். மலைகள் எடுக்க முடியாதபடி அவை கனப்பதற்குக் காரணம் அந்தச் சிறுவனே என்று இடும்பன் கருதி, அவனுடன் போரிட்டான், மாண்டான்.
இடும்பி அழுதும், தொழுதும் குமரனிடம் வேண்டினாள். முருகன் அருளால் இடும்பன் மீண்டும் உயிர் பெற்று எழுந்தான். முருகனை வணங்கி நின்றான். சிவகிரி, சக்திகிரிகளைக் காவடியில் சுமந்து வந்து முருகனது அருளைப் பெற்றான் இடும்பன். இவனைப் போல காவடி சுமந்து வரும் பக்தர்களுக்கும் அருள் தருவதாக அருளினான் முருகன். அதனால்தான் பக்தர்கள் முருகனருளை வேண்டி பங்குனி உத்திரத்தன்று பலவித காவடிகளை பக்தியுடன் ஏந்தி வந்து வழிபடுகின்றனர்.