சபரிமலையில் ஆராட்டு: பம்பையில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2016 11:03
சபரிமலை: சபரிமலையில் நடைபெற்று வரும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக நாளை பம்பையில் ஆராட்டு நடக்கிறது. இதில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று தேவசம்போர்டு கேட்டுக் கொண்டுள்ளது. சபரிமலையில் பத்து நாள் பங்குனி உத்திர திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில் தினமும் பகல் 12 மணிக்கு உற்சவ பலியும், இரவு ஸ்ரீபூதபலியும் நடக்கிறது. இரவு ஏழு மணிக்கு படிபூஜையும் நடக்கிறது. ஒன்பதாம் நாள் விழாவான இன்று நள்ளிரவில் சரங்குத்தியில் பள்ளிவேட்டை நடக்கிறது. நாளை காலை ஏழு மணிக்கு உஷபூஜைக்கு பின்னர் ஆராட்டு பவனி சன்னிதானத்தில் இருந்து பம்பைக்கு புறப்படும். ஐயப்பன் விக்ரகம் யானை மீது எடுத்து செல்லப்படும். பகல் 12.30 மணிக்கு பம்பையில் ஆராட்டு நடைபெறுகிறது. அதன் பின்னர் பம்பை கணபதி கோயில் முன்புறம் சுவாமிக்கு காணிக்கை சமர்ப்பித்து பக்தர்கள் வழிபடலாம்.பொதுவாக ஆராட்டு தினத்தில் ஐயப்பனை வழிபட ஏராளமான பெண்கள் பம்பை வருவர். சபரிமலை சென்று ஐயப்பனை வழிபட முடியாததை இங்கு வழிபட்டு பெண்கள் திருப்தி அடைவர். தற்போது சபரிமலைக்கு பெண்கள் செல்லலாமா என்பது பற்றிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு பம்பைக்கும் வயது பெண்கள் வரவேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. பெண்கள் பம்பைக்கு சில கிலோ மீட்டர் முன்னரே தடுத்து நிறுத்தப்படுவார்கள் என தெரிகிறது. நாளை மாலை மூன்று மணிக்கு ஆராட்டு பவனி பம்பையில் இருந்து புறப்படும். இரவு சன்னிதானம் வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும்.