பதிவு செய்த நாள்
24
மார்
2016
12:03
அன்னுார்: குமாரபாளையம் வட்டமலை ஆண்டவர் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கற்றனர். குமாரபாளையம், வட்டமலை ஆண்டவர் கோவில் பிரசித்தி பெற்றது. கோவில் வளாகத்தில் உள்ள சுனை பல தலைமுறையாக வற்றாமல் உள்ளது. இங்கு, எட்டாம் ஆண்டு பங்குனி உத்திர தேர்த்திருவிழா, 18ம் தேதி காலை கிராம தேவதை வழிபாடுடன் துவங்கியது. 22ம் தேதி மாலையில், சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளினார். 10:35 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். பெரிய தேரில், முருகப் பெருமான், வள்ளி தெய்வானையுடன், சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்தார். தேரோட்டத்தில், செண்டை மேளம், குதிரை ஆட்டம், ஜமாப் இசை நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக விநாயகர் அமர்ந்த சிறிய தேர் சென்றது. வழியில், மக்கள் வீதிகளில் நீர் ஊற்றி, தேர் இழுத்து வந்த பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கி வரவேற்பு அளித்தனர். திரளான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனர். இன்று (24ம் தேதி) இரவு பரிவேட்டை, தெப்போற்சவம் நடக்கிறது.