கரூர் தேவர்மலையில் அபயம் தந்தருளும் நரசிம்மர் கோயில் உள்ளது. இத்தலம் கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என நான்கு யுகங்களைக் கண்டது. மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமும் ஒன்று. கிருதயுகத்தில் பிரகலாதனும், மகாலட்சுமியும் நரசிம்மரை வழிபட்டனர். திரேதா யுகத்தில் ராமர், சீதை, லட்சுமணன் வணங்கினர். துவாபர யுகத்தில் பஞ்ச பாண்டவர்கள் வழிபட்டனர். மூன்று யுகங்களைக் கடந்து கலியுகத்தில் நாம் அனைவரும் நரசிம்மரை வழிபட்டுக் கொண்டிருக்கிறோம். இங்குள்ள புனிதமான பத்ம பிரம்ம தீர்த்தக்கரையில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால், மிகக்கொடிய பித்ரு சாபங்கள் நீங்கி இறைவனின் பரிபூரண அருளைப் பெறலாம். மூலவர் நரசிம்மர் நான்கு திருக்கரங்களில் மேல் இரு கரங்கள் சங்கு சக்கரம் தாங்கி, கீழ் இடது கையால் யோகமுத்திரை காட்டி, கீழ் வலது கரத்தால் அபயமுத்திரை காட்டி அருள்பாலிக்கிறார். சிம்மரின் கையில் விரல்கள் நீளமாகவும் கூரிய நகங்களோடும் காணப்படுகிறது. இங்குள்ள தாயார் கமலவல்லி அபயஹஸ்தம் காட்டி அருள்பாலிக்கிறார். கரூரில் இருந்து குஜிலியம்பாறை வழியாக திண்டுக்கல் செல்லும் வழியில் பாளையத்தில் இறங்கி சுமார் 5 கி.மீ. பயணித்தால் தேவர்தலை நரசிம்மர் தலத்தை அடைந்து விடலாம்.