பதிவு செய்த நாள்
30
ஆக
2011
10:08
திருச்சி: ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாள், திடீரென இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் போற்றி புகழப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இக்கோவிலின் 236 அடி உயர ராஜகோபுரம் போலவே, கோவில் யானை ஆண்டாளும் பிரசித்தி பெற்றது. அரங்கருக்கு திருமஞ்சன சேவை உள்ளிட்ட சேவைகளை தினமும் மேற்கொள்ளும் ஆண்டாள், முன்னங்கால்களை தூக்கி வித்தை செய்வது, "மவுத் ஆர்கன் வாசிப்பது போன்ற செயல்களால் பக்தர்களின் மனத்தை பெரிதும் கவர்ந்துள்ளது. அதனால், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் ஆண்டாளை பார்க்காமல் செல்வதில்லை. ஸ்ரீரங்கம் பெரிய கருடாழ்வார் சன்னதி முன் ஆண்டாள் நிற்பது வழக்கம். அதற்காக, தடுப்புக்கட்டைகள் போடப்பட்டு, ரப்பர் சீட்டுகள் விரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று கோவிலுக்கு சென்ற பக்தர்கள், வழக்கமான இடத்தில் ஆண்டாள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கோவில் தரப்பில் கூறியதாவது: நேற்று முன்தினம் யானை ஆண்டாளை, கால்நடை டாக்டர் சுகுமாரன் தலைமையிலான குழுவினர் பரிசோதனை செய்தனர். அப்போது ஆண்டாளின் உடல் எடை மிக அதிகமாக இருப்பது தெரியவந்தது. பக்தர்கள் வழங்கும், தேங்காய், வாழைப்பழத்தால் எடை கூடியுள்ளது. அதிக உடல் எடையால் மூட்டு வலியால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், மணல் உள்ள இடத்தில் யானையை நிறுத்த அறிவுறுத்தினர். நேற்று முதல் யானை ஆண்டாள், ஆயிரங்கால் மண்டபம் அருகே மணற்பாங்கான இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. யானைக்கு தொற்று நோய் பரவாமல் இருக்க பக்தர்களுக்கு ஆசி வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். கோவில் யானை இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து பக்தர்கள் கூறியதாவது: கோவில் யானைகளை முழு முதற்கடவுள் விநாயகரின் அம்சமாக கருதி பக்தர்கள் வழிபடுகின்றனர். எல்லா கோவில்களிலும் யானையிடம் ஆசிப்பெற்ற பிறகே மூலவரை தரிசிக்கச் செல்கின்றனர். ஸ்ரீரங்கம் கோவிலிலும் ஆண்டாளிடம் ஆசிப் பெற்ற பிறகே பக்தர்கள், மூலவரை சேவிக்கச் செல்லும் வகையில் பெரிய கருடாழ்வார் சன்னதி முன் நிறுத்தப்பட்டது. தற்போது இடம் மாற்றப்பட்டுள்ளது. மணல் மீது யானைகள் நிற்க வேண்டும் என்று கோவில்களில் விதி இருந்தாலும், யானை நிற்கும் இடத்தில் சிறிது மணல் பரப்பி அதன்மேல் நிற்க வைக்கலாம். அதைவிடுத்து பக்தர்கள் செல்லாத இடத்தில் யானையை நிறுத்தக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர். ஸ்ரீரங்கம் கோவில் யானை இடமாற்றம் செய்யப்பட்டதுக்கு பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.