பதிவு செய்த நாள்
09
ஏப்
2016
11:04
திருப்பூர்: பக்தர்கள் கோரிக்கையை ஏற்று, திருமலை திருப்பதி தரிசன நுழைவு வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. திருப்பூர் ஸ்ரீவாரி டிரஸ்ட் தலைவர் பலராமன், நிர்வாக அறங்காவலர் சுப்ரமணியம், கவுரவ ஆலோசகர்கள் சச்சிதானந்தம், முத்து நடராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூர் தாராபுரம் ரோட்டில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் டிக்கெட் முன்பதிவு மையத்தை, ஸ்ரீவாரி டிரஸ்ட் நடத்தி வருகிறது. ரூ.50க்கு சுதர்சன டிக்கெட், ரூ.300க்கு விரைவு தரிசன டிக்கெட், ஆர்ஜித சேவை டிக்கெட், திருமலையில் தங்கும் விடுதி முன்பதிவு டிக்கெட், 60 நாட்களுக்கு முன், பதிவு செய்யப்படுகிறது.
சிறப்பு விரைவு தரிசன நுழைவாயில், திருமலையில், "லெபாக்ஸி அருகில், அதாவது, எஸ்.எம்.சி., எனப்படும் "சங்குமித்தா கெஸ்ட் அவுஸ் அருகில் துவங்கி, வைகுந்தம் காம்ப்ளக்ஸ் அடைய, 2 கி.மீ., தூரம் நடக்க வேண்டிய சிரமம் ஏற்பட்டது. இவ்வழியை மாற்ற பக்தர்கள் தரப்பில், கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையேற்று, புதிய நுழைவு பகுதி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, புதிய நுழைவு பகுதி, வைகுந்தம் காம்ப்ளக்ஸ் கார் பார்க்கிங் எதிர்புறம் உள்ள புதிய கட்டடத்தில் இருந்து துவங்கும். இனி, ரூ.50 சுதர்சன டிக்கெட் மற்றும் ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் பெறும் பக்தர்கள், புதிய வழித்தடத்தில் செல்ல அனுமதிக்கப்படுவர்; இதன் மூலம், 1 கி.மீ., தூர நடை பயணம் குறைகிறது. புதிய கட்டடத்தில், உடமைகள் பாதுகாப்பு, மொபைல் போன் டிபாசிட் கவுன்டர், இலவச உணவு கவுன்டர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. ஆர்ஜித சேவா டிக்கெட் நுழைவு வழியில் எந்த மாற்றமும் இல்லை. கோடை விடுமுறையால், ஏப்., மே மற்றும் ஜூன் வரை, சுதர்சன டிக்கெட்டுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன; ஜூலை 1 முதல் மீண்டும் டிக்கெட் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு: 0421 2424 401 என்ற எண்ணில், ஸ்ரீவாரி டிரஸ்ட் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.