திருக்கனுார்: திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு ஜோதி தரிசனம் நாளை நடக்கிறது. திருக்கனுார் அடுத்த தமிழகப் பகுதியான திருவக்கரை கிராமத்தில் பழமையான சந்திர மவுலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், வளாகத்தில் அமைந்துள்ள வக்ரகாளியம்மனுக்கு மாதம்தோறும் பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் ஜோதி தரிசனம் நடந்து வருகிறது. இதில், சித்தரை மாத பவுர்ணமி விழா நாளை (21ம் தேதி) நடக்கிறது. அதனையொட்டி, அன்று காலை வக்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடக்கிறது. மாலை 5:30 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. முக்கிய நிகழ்வாக இரவு 12:00 மணிக்கு வக்ரகாளியம்மன் கோவில் கோபுரத்தில் ஜோதி தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து, முத்து பல்லக்கில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. 22ம் தேதி காலை 7:00 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து 1008 பால்குடம் எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் பாலசுப்ரமணிய ராஜன், மேலாளர் ரவி, உதவி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.