பதிவு செய்த நாள்
31
ஆக
2011
12:08
சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்! ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோபசாந்தயே!! என்ற ஸ்லோகத்தில் விநாயகரின் பெயர் ஒரு இடத்தில் கூட இல்லை. ஆனால், இந்த ஸ்லோகத்தை சொன்னபிறகு யாகம், சுபநிகழ்ச்சிகள் முதலானவற்றைத் தொடங்குகிறார்கள். சுக்லாம்பரதரம் என்றால் வெள்ளை வஸ்திரம் அணிந்தவர் என்று பொருள். விநாயகருக்கு மட்டுமின்றி, சரஸ்வதி, சிவன் உள்ளிட்ட அநேக தெய்வங்களுக்கு வெள்ளை சாஸ்திரம் சாத்துவது இயல்பே. எனவே, இது விநாயகரைக் குறிக்கவில்லை. விஷ்ணும் என்றால் எங்கும் பரந்துள்ள என்று பொருள். எல்லா தெய்வங்களுமே எங்கும் பரந்துள்ளவை தான். எனவே, இங்கும் விநாயகர் என்ற பெயர் பொருத்தம் எடுபடவில்லை. சசிவர்ணம் என்றால் சந்திரன் போல் அழகு என பொருள். இதுவும், எல்லா தெய்வங்களுக்கும் பொருந்தும். சதுர்புஜம் எனப்படும் நான்கு கரங்களும் பல தெய்வங்களுக்கு உள்ளன. ப்ரஸந்ந வதனம் எனப்படும் முகப்பொலிவும் எல்லா தெய்வங்களுக்கும் உள்ளது. கடைசியாக வரும் விக்நோபசாந்தயே என்ற சொல் தான் விநாயகருக்கு பொருந்துகிறது. விக்னம் என்றால் தடை. தடைகளை நீக்கி அருளும் விக்னேஷ்வரர் என்பது, ஒரு செயலைத் துவங்கும் முன் விநாயகரை வணங்கி, நல்லபடியாக முடிய வேண்டும் என்று வேண்டுவதாக ஆகிறது. எனவே, தான் இந்த ஸ்லோகம் பெரும் புகழ் பெற்றதாக விளங்குகிறது.
குட்டுவதற்குரிய ஸ்லோகம்: விநாயகரை வணங்கும் போது, தலையில் குட்டிக் கொள்வது வழக்கம். அப்படி குட்டும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் மிகவும் இலகுவானது. நீங்கள் அடிக்கடி கோயில்களிலும், வீடுகளில் சுபநிகழ்ச்சிகள் நடத்தும்போது, அர்ச்சகர்கள் சொல்லி நாம் கேட்பது. இதோ, அந்த ஸ்லோகம்.
சுக்லாம்பரதரம், விஷ்ணும்,
சசிவர்ணம், சதுர்புஜம்!
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோபசாந்தயே!!
இந்த ஸ்லோகத்தைச் சொல்லும் போது, சுக்லாம்பரதரம் துவங்கி ப்ரஸந்ந வதநம் வரையான ஐந்து சொற்கள் வரை தலையில் ஐந்துமுறை குட்டிக் கொள்ள வேண்டும். இந்த ஸ்லோகம் விநாயகருக்கு ரொம்பவும் பிடிக்கும். இதைச் சொன்னால், நாம் துவங்கும் செயல்கள் தங்குதடையின்றி நடக்கும்.