பதிவு செய்த நாள்
31
ஆக
2011
12:08
கர்நாடகத்தில் பீஜப்பூர் அருகிலுள்ள பங்கூர் கிராம மலைப்பகுதியில் 12 அடி உயர விநாயகர் சிலை உள்ளது. இங்குள்ள கிராம மக்கள் செய்து கொள்ளும் வேண்டுதல் வித்தியாசமானது. இங்குள்ள கிராம மக்கள், அப்பனே! விநாயகா! எங்கள் விருப்பத்தை நிறைவேற்று. உன் நிறத்தை மாற்றி வேறு நிறம் அடிக்கிறோம், என்று வேண்டிக் கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறப் பெற்றவர்கள் பிள்ளையாருக்கு விருப்பப்பட்ட வண்ணத்தை அடிக்கின்றனர். ஒரேநாளில் இரண்டிலிருந்து நான்குமுறை கூட இவ்விநாயகர் வண்ணம் மாறிவிடுகிறார்.
பாதாள விநாயகர்: உயரமான இடத்தில் மலைமீது விநாயகர் இருப்பது போலவே, சில தலங்களில் பாதாளத்திலும் அருள்புரிகிறார். காளஹஸ்தி காளத்தீஸ்வரர் கோயில் ராகுகேது பரிகாரத்தலமாகத் திகழ்கிறது. இங்கு 35 அடி ஆழத்தில் அமர்ந்திருக்கும் பாதாளவிநாயகர் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். வளைந்து நெளிந்து குறுகலான படிகளில் இறங்கிச் சென்றால் இவரைத் தரிசிக்கலாம். இவர் அருகே நீர் சுரந்து கொண்டே இருக்கும். கோயிலருகே பொன்முகலி ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. இதே போன்று, சிவத்தலமான விருத்தாசலம் பழமறைநாதர் கோயிலில் 18அடி ஆழத்தில் இவருக்கு சந்நிதி உள்ளது. அதனால், இவருக்கு ஆழத்து விநாயகர் என்றே பெயர். இவருக்கென்று தனி கொடிமரமும், திருவிழாவும் நடத்துவது சிறப்பு.
முதல்பிள்ளை சிவனுக்கு மூத்தபிள்ளை: ரிக்வேதம் பழமையானது. இதில், விநாயகரைப் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. வேதகாலம் முதல் வழிபடப்பட்டுவரும் பழமையான கடவுள் இவர் என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது. ரிக்வேதத்தின் மூன்றாம் மண்டலத்தில் கணபதீம் என்ற குறிப்பு உள்ளது. இப்பெயரோடு ஜ்யேஷ்ட ராஜன் என்ற பெயரும் இவருக்குண்டு. இதற்கு முதலில் பிறந்தவன் என்பது பொருளாகும். பார்க்கவ புராணத்தில் லீலா காண்டத்தில் விநாயகரின் அவதாரங்களும் அவருடைய திருவிளையாடல்களும் கூறப்பட்டுள்ளன. கடவுள் மறுப்பு கொள்கை உடைய புத்த, சமண கோயில்களிலும் இவருக்கு இடமுண்டு. தைத்ரீய ஆரண்யகம் இவரை தந்தி என்ற சொல்லால் அழைக்கிறது. தந்தோ தந்தி ப்ரசோதயாத் என்றே காயத்ரி மந்திரம் விநாயகரை குறிப்பிடுவதைக் காணலாம்.