பதிவு செய்த நாள்
23
ஏப்
2016
11:04
தஞ்சாவூர், :கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவிலின் பெருமாள், உபயநாச்சியார்களுடன் திருத்தேரில் எழுந்தருளிய, சித்திரை பெரிய தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது.
திவ்ய தேசங்கள், 108ல், ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்தாற்போல், சிறந்த தலமாகப் போற்றப்படுவது கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோவில். தமிழ் வேதமாகக் கருதப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தம் விளைந்த தலம் என்ற பெருமைக்கு உரியது இக்கோவில். மிகவும் பழமையான இத்திருக்கோவிலில், ஆராவமுதன் எனும் சாரங்கபாணி பெருமாள் மூலவராக எழுந்தருளியுள்ளார். இக்கோவில் சித்திரைப் பெருவிழா, 14ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு பெருமாள் உபயநாச்சியார்களுடன் தங்க இந்திர விமானத்தில் வீதி புறப்பாடு நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய விழாவாக, ஒன்பதாம் திருநாளான நேற்று, சித்திரைத் திருத்தேர் எனும் பெரிய தேரின் தேரோட்டம் நடைபெற்றது. கோவிலின் நான்கு வீதிகளையும் சுற்றி வந்த தேர், மாலையில் நிலைக்கு வந்தது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து, உற்சாகமாக, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.