பதிவு செய்த நாள்
18
மே
2016
10:05
கூடலுார்: கூடலுார் பகுதியில், ரத ஊர்வலத்தில் வந்த திருப்பதி வெங்கடாஜலபதி உற்சவமூர்த்தியை, ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். ராமானுஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அவர் சென்ற ஊர்களில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், கடந்த, 12ம் தேதி முதல், திருப்பதி வெங்கடாஜலபதி உற்சவ மூர்த்தியின் ரத ஊர்வலம் நடந்து வருகிறது.
கடப்பா, கர்ணுால்,அனந்தாபுரம், கர்நாடகா பெங்களூரு, மைசூரு வழியாக, நேற்று காலை, 11:45 மணிக்கு, கூடலுார் பகுதிக்கு ரதம் வந்தது. கூடலுார் கோர்ட் அருகே, மேளதாளம் முழங்க ரத ஊர்வ லம் துவங்கியது. ஊர்வலம் நகரின் முக்கிய சாலைகளின் வழியாக சென்று, ஜானகியம்மாள் திருமணம் மண்டபத்தில் நிறை வடைந்தது. அங்கு, பக்தர்கள் சார்பில், திருப்பதி வெங்காடஜலபதி உற்சவ மூர்த்திக்கு பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான மக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து, ரத ஊர்வலம் கோழிகோடு சாலை வழியாக, கேரள மாநிலம் குருவாயூர் பகுதிக்கு சென்றது. கூடலுாரில் பகுதியில் நடந்த ரத ஊர்வலத்துக்கான ஏற்பாடுகளை, கூடலுார் ஸ்ரீ நாராயண சேவா கூட்டு வழிபாடு அறக்கட்டளை, நம்பாலகோட்டை ஸ்ரீ சிவன் மலை கிரிவல குழுவினர் செய்திருந்தனர். விழா குழுவினர் கூறுகையில், திருப்பதியில் துவங்கிய உற்சவ மூர்த்தி ஊர்வலம், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு, சென்று, அடுத்த ஆண்டு மே மாதம் திருப்பதி சென்றடையும் என்றனர்.