பதிவு செய்த நாள்
09
செப்
2011
12:09
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே காமாட்சி அம்மன் உடனுறை கைலாசநாதர் ஸ்வாமி கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கெங்கவல்லி அருகே நடுவலூர் கிராமத்தில், பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் உடனுறை கைலாசநாதர் ஸ்வாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலின் ராஜகோபுரம் புனரமைக்கும் பணி, கடந்த சில மாதங்களாக நடந்தது.நேற்று, கைலாசநாதர், பெருமாள் ஸ்வாமி கோவிலின் ராஜகோபுர கும்பாபிஷே விழா நடந்தது. நேற்று முன்தினம் காலை 6.30 மணியளவில், விநாயகர் பூஜை, புண்ணியாகவாஜனம், கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி ப்ரவேசபலி, மிருத்சங்கரணம், கலாகர்ஷணம், அங்குரார்பணம், ரஷாபந்தனம், யாகசாலை பிரவேசம், கடஸ்தாபனம், வேதிகா அர்ச்சனை, மூர்த்தி ஹோமங்கள், பூர்ணாகுதி உள்ளிட்ட தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை 4.30 மணியளவில், கலச பூஜை, வேதபாராயணம், பரிவார மூர்த்தி ஹோமங்கள், பிம்பசுத்தி தேவதா ரக்ஷாபந்தனம், நாடி சந்தானம், ஸ்பரிஷாகுதி, மஹா பூர்ணாகுதி, மந்திரபுஷ்பம், யாத்ராதானம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.தொடர்ந்து, காமாட்சி அம்மன் உடனுறை கைலாசநாதர் ஸ்வாமி கோவில் ராஜகோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, கைலாசநாதர் ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நடுவலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.