பதிவு செய்த நாள்
17
ஜூன்
2016
11:06
கரூர்: கரூர் மாவட்டம், ம.புதுப்பட்டியில் மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மகாதானபுரம் தெற்கு ம.புதுப்பட்டி மகா சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டது. பின்னர் கணபதி, நவக்கிரக, மகாலட்சுமி ஹோமங்கள், விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், உபசார பூஜைகள் நேற்று முன்தினம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று இரண்டாம் கால யாக பூஜைகள், விநாயகர் வழிபாடு, கடம் புறப்பாடு நடந்தது. புதிதாக கட்டப்பட்ட விநாயகர் சன்னதி கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பாலமுருகன், பகவதியம்மன், காளியம்மன், கருப்பண்ண சுவாமி சன்னதி விமான கும்பாபிஷேகம், மகாமாரியம்மன் மூலவர் கும்பாபிஷேகம் நடந்தது. இன்று தொடங்கி, 48 நாட்களுக்கு கோவிலில் மண்டல பூஜை நடக்கிறது.