பதிவு செய்த நாள்
17
ஜூன்
2016
11:06
திருப்பதி,:திருமலையில், ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் பொருட்களை சோதிக்கும் பணியில், சேவார்த்திகளை ஈடுபடுத்தி, திருப்பதியின் பாதுகாப்பில், தேவஸ்தானம் அலட்சியம் காட்டி வருவதாக பக்தர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். திருப்பதி, திருமலைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதாக, மத்திய உளவுத்துறை எச்சரித்து வருகிறது. அதனால், திருப்பதி ரயில், பஸ் நிலையம், திருமலை செல்லும் மலைப்பாதை உள்ளிட்ட பல இடங்களில், கண்காணிப்பு கேமரா நிறுவியும், பாதுகாப்பு பயினரை கூடுதலாக நியமித்தும், கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருப்பதியில் பக்தர்கள் தங்கும் வாடகை அறை வளாகத்திலும், ஸ்கேனர் கருவிகள் நிறுவி, பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களை பரிசோதித்து வருகின்றனர். திருப்பதியில் உள்ள, தேவஸ்தானத்திற்கு சொந்தமான, விஷ்ணு நிவாசம், சீனிவாசம், மாதவம், எஸ்.வி.பத்மாவதி விருந்தினர் மாளிகை வளாகங்களில், தினமும், பல ஆயிரம் பக்தர்கள் தங்குகின்றனர். இங்குள்ள, ஸ்கேனர் கருவிகள் வேலை செய்யாததால், கண்காணிப்பு படையினர் சோதித்து, அறைக்குள் அனுமதிப்பர். சில நாட்களாக, ஸ்ரீவாரி சேவார்த்திகள், இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது:இது, சரியான நடைமுறை அல்ல; பாதுகாப்பு குளறுபடியைக் காட்டுகிறது. இதன் மூலம், தடை விதிக்கபட்ட குட்கா, பான்பராக், சிகரெட் உள்ளிட்ட பொருட்களை, பக்தர்கள், அறைகளுக்கு கொண்டு செல்கின்றனர். தேவஸ்தான அதிகாரிகள், இதில் தலையிட்டு, கண்காணிப்பு போலீசாரை அதிகரிக்கச் செய்து, பாதுகாப்பு பணியை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.